தொழில் நிபுணத்துவ மேம்பாட்டு ஆதரவுத் திட்டத்தின்கீழ் தொழில்முறை தகுதிகளைப் பெறும் சமூக சேவை நிபுணர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுவரும் 75 விழுக்காடு கல்விக் கட்டண நிதியுதவி, முழுமையாக ஈடுசெய்யும் அளவிற்கு அதிகரிக்கப்படும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி தெரிவித்துள்ளார்.
மேலும், அடுத்த ஆண்டிலிருந்து சமூக சேவை திறனாளர் அணி ஆய்வு விருது விரிவடைந்து, பலதுறைத் தொழிற்கல்லூரிகளிலும் தொழில்நுட்பக் கல்விக் கழகங்களிலும் அடிப்படை நுழைவுக் கல்வியை மேற்கொள்ளும் மாணவர்களை உள்ளடக்கும் வகையில் மாற்றப்படும் என்றும் அவர் கூறினார்.
சமூக சேவை நிபுணர்களைக் கொண்டாடும் ஆண்டின் நிறைவு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு திரு மசகோஸ் உரையாற்றினார்.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் திட்டங்களைப் பற்றி விளக்கிய இவர், சமூக சேவைத் துறையில் இருக்கும் தலைவர்களுக்கு அதிக ஆதரவு வழங்கும் வகையில் அமைச்சு அடிப்படை தலைமைப் பயிற்சிக்கு வழங்கப்படும் நிதி உதவியை இனி சமூக சேவை அமைப்புகளில் உள்ள முதல்முறை தலைவர்கள், மூத்த தலைவர்கள் இருதரப்புக்கும் விரிவுபடுத்தும் என்றார்.
புதிதாக அமைக்கப்பட்ட நிபுணத்துவச் சேவை குழுமம் கண்காணிப்புத் தரங்கள், நடைமுறைகளைச் சிறப்பாக ஆதரித்து மேம்படுத்துவதற்காக சமூக சேவைத் துறையுடன் இணைந்து ‘மேற்பார்வை நெக்சஸ்’ என்ற கட்டமைப்பை உருவாக்கும் என்றும் அமைச்சர் மசகோஸ் சொன்னார்.
கரையோரப் பூந்தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 9) இடம்பெற்ற நிகழ்ச்சியில் சமூக சேவை நிபுணர்கள் பலர் கலந்துகொண்டனர்.
சமூக சேவைத் துறைக்குள் எப்போதும் எதிர்கால நோக்குடன் இருக்க வேண்டும் என்றும் நாளைய சவால்களை முன்கூட்டியே கணித்து, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் தீர்வுகளை உருவாக்கக் கிடைக்கக்கூடிய கருவிகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்திய திரு மசகோஸ், பணியில் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டைப் பற்றியும் பேசினார்.
தமது உரையில் மூப்படையும் மக்கள்தொகையைப் பற்றிக் குறிப்பிட்ட இவர், இதர நாடுகளுடன் கைகோக்கும்போது சமூக சேவை நிபுணர்கள் திட்டங்களைப் பகிர்ந்து தேவைப்படுவோருக்குச் சிறப்பாகச் சேவையாற்ற கொள்கைகளையும் நடைமுறைகளையும் மேம்படுத்தலாம் என்றார்.
தொடர்புடைய செய்திகள்
“கம்போடியா, தாய்லாந்து, பிலிப்பீன்ஸ் போன்ற நாடுகளுடன் கூட்டாண்மை உறவுகளைச் சிங்கப்பூர் ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள குழந்தைகளது வாழ்க்கையின் முதல் 1,000 நாள்களை இலக்காகக் கொண்டு குழந்தை மேம்பாடு குறித்து அந்நாடுகளுடன் சிங்கப்பூர் ஒத்துழைக்கும்,” என்று திரு மசகோஸ் கூறினார்.

