குடும்பங்களுக்கு உதவ சமூகச் சேவை சீரமைப்பு

குடும்பங்களுக்கு உதவ சமூகச் சேவை சீரமைப்பு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

26 Nov 2026 - 8:47 pm

2 mins read

பலதரப்பட்ட பிரச்சினைகளை எதிர்கொள்ளும் குடும்பங்களுக்குத் தீர்வு காண்பதை எளிதாக்கும் வகையில், அவர்களுக்கு வழங்கப்படும் சமூகச் சேவைகள் எதிர்வரும் ஆண்டுகளில் பெரிய அளவில் சீரமைக்கப்பட உள்ளன.

கடந்த 2024 ஜூன் மாதம் அமைக்கப்பட்ட குடும்பச் சேவைகள் மறுஆய்வுக் குழு முன்வைத்த 19 பரிந்துரைகளையும் கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டுள்ளதாகச் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு வியாழக்கிழமை (நவம்பர் 26) அறிவித்தது. ‘ஒரு குடும்பச் சேவை’ (One Family Service) மாதிரியை உருவாக்குவதே இதன் நோக்காகும்.

அமைச்சின் நிதியுதவி பெறும் ஒன்பது திட்டங்களை ஒரே ஒருங்கிணைந்த சேவையாக இப்புதிய மாதிரி மறுகட்டமைக்கும்.

குடும்ப ஆதரவு, குடும்ப வன்முறை, பாதுகாப்பு, இளமையில் குற்றம் செய்தல் ஆகிய துறைகளை உள்ளடக்கிய இந்த ஒன்பது திட்டங்கள், ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 35,000 தனிநபர்கள் அல்லது குடும்பங்களுக்குச் சேவையாற்றுகின்றன. இவர்களில் ஐந்தில் ஒரு குடும்பம் ஒன்றுக்கும் மேற்பட்ட திட்டங்களின் உதவியைப் பெறுகிறது.

தற்போது, குடும்ப வன்முறையை எதிர்கொள்ளும் குடும்பத்தில் ஒரு பிள்ளை சட்டச் சிக்கலில் இருந்தால், பெற்றோருக்கும் இளையருக்கும் தனித்தனிச் செயல்திட்டங்கள் உள்ளன.

புதிய முறையின்கீழ், வல்லுநர்கள் குழுவின் ஆதரவுடன் குடும்பத்தின் தேவைகளை முழுமையாகக் கருத்தில்கொள்ளும் ஒரே ஒருங்கிணைந்த செயல்திட்டம் இருக்கும்.

இத்திட்டத்தின்கீழ் சிங்கப்பூர் ஏழு வட்டாரங்களாகப் பிரிக்கப்படும். முதற்கட்டமாக மூன்று வட்டாரங்களில் 2029 ஆம் ஆண்டு இது தொடங்கப்பட்டு, எஞ்சிய வட்டாரங்களில் அடுத்த ஓரிரு ஆண்டுகளில் விரிவுபடுத்தப்படும்.

முதல் மூன்று வட்டாரங்கள் யாவை என்பது இன்னும் முடிவுசெய்யப்படவில்லை என்று அமைச்சின் பேச்சாளர் கூறினார்.

குடும்பச் சேவை நிலையங்கள் கையாளும் சிக்கலான, அதிகப் பாதுகாப்பு அபாயம் கொண்ட வழக்குகளின் விகிதம் 2019ஆம் ஆண்டில் கால் பங்காக இருந்து, 2025 ஆம் ஆண்டில் 30 விழுக்காடாக உயர்ந்தது.

ஒவ்வொரு பிரச்சினையையும் தனித்தனியாகக் கையாள்வது தற்காலிக முன்னேற்றத்தையே தரும் என்றும், மூப்படையும் மக்கள்தொகை, சிறிய குடும்பங்கள் போன்ற மாற்றங்களால் வலுவான ஒருங்கிணைப்பு அவசியமாகிறது என்றும் அறிக்கை குறிப்பிட்டது.

மொத்தம் 28 சமூகச் சேவை அமைப்புகள், சங்கங்களின் 50க்கும் மேற்பட்ட பேராளர்களும் 400க்கும் மேற்பட்ட சமூகச் சேவை வல்லுநர்களும் இக்குழுவின் பணிகளில் ஈடுபட்டனர்.

இக்குழுவின் இணைத் தலைவரும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு மூத்த நாடாளுமன்றச் செயலாளருமான எரிக் சுவா, குடும்பங்களின் சூழல் மாறும்போது அவர்களின் பயணத்தை எளிமையாகவும் தொடர்ச்சியாகவும் மாற்றுவதே இதன் நோக்கம் என்று கூறினார்.

26 சமூகச் சேவை அமைப்புகள் வட்டார அளவில் இணைந்து திட்டமிட்டுச் சேவை வழங்குவதுடன், ஒவ்வொரு குடும்பத்திற்கும் முதன்மைப் பொறுப்பாளர் ஒருவர் நியமிக்கப்படுவார். வெவ்வேறு வல்லுநர்களிடம் பேசுவதால் ஏற்படும் மனச்சுமையை இது குறைக்கும்.

மேலும், பொதுவான மின்னிலக்கத் தளத்தையும் ஒரே இடத்தில் அனைத்துச் சேவைகளையும் வழங்கும் மையங்களையும் உருவாக்கக் குழு பரிந்துரைத்துள்ளது.

சமூகச் சேவை வல்லுநர்களின் பயிற்சிக்கு உயர்கல்வி நிலையங்களுடன் இணைந்து செயல்படவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.சேவைத் தேவை அதிகரிப்பதால் ஆட்குறைப்பு ஏற்படாது என்றும், பயிற்சிகளில் கணிசமாக முதலீடு செய்யப்படும் என்றும் அமைச்சின் பேச்சாளர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்