தற்காப்பு என்பது மொத்தச் சமுதாயமும் இணைந்து மேற்கொள்ள வேண்டிய முயற்சி என்று தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான கா. சண்முகம் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் ஆயுதப் படையும் உள்துறை அமைச்சும் முக்கியம் என்றாலும் சமுதாயம் மீள்திறன், தயார்நிலை, ஒற்றுமை ஆகியவற்றைக் கடைப்பிடித்து ஒன்றாக இந்த முயற்சியில் இணைவது அவசியம் என்று திரு சண்முகம் தமது முழுமைத் தற்காப்புச் செய்தியில் கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 1), ‘அவர் தெம்பனிஸ் ஹப்’ (Our Tampinese Hub) ஒருங்கிணைந்த சமூக, வாழ்வியல் மையத்தில் நடைபெற்ற முழுமைத் தற்காப்பு நினைவுகூரும் நிகழ்ச்சியில் பிற்பகல் 3 மணிக்குப் பொது எச்சரிக்கை ஒலி ஒலிக்கப்பட்டது.
அதை அடுத்து, அமைச்சர் சண்முகம் பேசிய காணொளி திரையிடப்பட்டது. தொலைக்காட்சியிலும் வானொலியிலும் அவரது உரை இடம்பெற்றது.
உலகம் அதிகமான போர்களையும் பயங்கரவாதத் தாக்குதல்களையும் கண்டுவரும் வேளையில் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகளும் கொடுந்துயரமும் ஏற்பட்டதைத் திரு சண்முகம் குறிப்பிட்டார்.
மின்னிலக்க, தகவல் சார்ந்த மிரட்டல்கள் மக்கள் வாழ்வைப் பாதித்ததுடன் சமுதாயங்களை ஆழமாகப் பிளந்துள்ளன என்று அவர் கூறினார்.
“சிங்கப்பூர் ஆயுதப் படையையும் உள்நாட்டுப் பாதுகாப்பையும் பல்லாண்டுகளாக வலுப்படுத்தியுள்ளதால் இங்கு நாம் போராலும் பயங்கரவாதத் தாக்குதலாலும் பாதிக்கப்படவில்லை. சமூக, இன, சமய ஒற்றுமையை வலுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முதலீடுகளை நாம் செய்திருக்கிறோம்,” என்று திரு சண்முகம் கூறினார்.
இருந்தபோதும் புதிய துறைகளில் கடுமையான மிரட்டல்கள் முளைத்துள்ளதையும் அமைச்சர் சுட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
“அத்தியாவசியச் சேவைக்கு இடையூறு விளைவிக்கக்கூடிய, மிகவும் நுட்பமாகச் செயல்படக்கூடிய தரப்பினால் கடந்த ஆண்டு, முக்கியமான நம் உள்கட்டமைப்பு இணையத் தாக்குதலுக்கு உள்ளானது. நம் சமூகத்தைப் பிளவுபடுத்தி அரசாங்கத்தின்மீதான நம்பிக்கையைக் குலைக்க வெளிநாட்டுத் தரப்புகளும் முயன்று வருகின்றன,” என்று அவர் கூறினார்.
சிங்கப்பூர் ஆயுதப்படையும் உள்துறை அமைச்சும் பாதுகாப்புக்கு அவசியமாகவும் அடிப்படையாகவும் இருந்தாலும் இதன் தொடர்பில் சமூகம் ஒன்றுபடவேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
“ஒவ்வொரு தனிநபரும், ஒவ்வொரு குடும்பமும், ஒவ்வொரு முதலாளியும் அவசியம். ஒட்டுமொத்தச் சமூகமும் இதற்குப் பங்காற்ற வேண்டியுள்ளது,” என்றார் திரு சண்முகம்.
கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக முழுமைத் தற்காப்பு சிங்கப்பூரையும் சிங்கப்பூரர்களையும் பாதுகாப்பாக வைத்திருப்பதாகக் கூறிய அமைச்சர், பயங்கரவாதத்திலிருந்தும் பொருளியல் நெருக்கடிகள், பெருந்தொற்றுகள் போன்றவற்றிலிருந்தும் அது பாதுகாத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
“ஒவ்வொரு முறையும் நாம் சவால்களை எதிர்கொள்ளும்போது கூடுதல் வலிமையுடனும் ஒற்றுமையுடனும் வெளிவருகிறோம்,” என்று அவர் கூறினார்.
இந்த மாதம் முழுமைத் தற்காப்பை நினைவுகூரும் வேளையில், ராணுவ, குடிமை, பொருளியல், சமூக, மின்னிலக்க, உளவியல் ரீதியான தற்காப்பில் பங்காற்ற உறுதியேற்குமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
அத்தியாவசியச் சேவைகளுக்கு ஏற்படும் தடங்கல்களுக்குத் தயாராக ‘எக்சர்சைஸ் எஸ்ஜி ரெடி’ (Exercise SG Ready) பயிற்சியில் பங்கேற்கும்படிப் பொதுமக்களை அவர் ஊக்குவித்தார்.

