சிங்கப்பூரின் பசுமைத் திட்ட முயற்சியின்கீழ் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்துக்குச் சொந்தமான 1,075 குடியிருப்புக் கட்டடங்களில் சூரியசக்தித் தகடுகள் பொருத்தப்படவுள்ளன.
இதற்கான பணிகள் 2026ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வீவக குடியிருப்புக் கட்டடங்களையும் சேர்த்து ஏறத்தாழ 9,500 வீவக குடியிருப்புக் கட்டடங்களில் சூரியசக்தித் தகடுகள் பொருத்தப்பட்டிருக்கும்.
சிங்கப்பூரெங்கும் 10,000க்கும் மேற்பட்ட வீவக குடியிருப்புக் கட்டடங்கள் உள்ளன.
அடுத்த மூன்று ஆண்டுகளில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வீவக குடியிருப்புக் கட்டடங்களில் சூரியசக்தித் தகடுகளைப் பொருத்த இலக்கு கொண்டிருப்பதாக வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் நேற்று தெரிவித்தது.
சூரியசக்தித் தகடுகள் மூலம் பெறப்படும் எரிசக்தியைப் பயன்படுத்தி பகல் நேரத்தில் வீவக குடியிருப்புக் கட்டடங்களின் மின்தூக்கிகள், விளக்குகள், நீர் அழுத்த விசை போன்றவை இயக்கப்படுகின்றன. எஞ்சிய சூரியசக்தி மின்சார விநியோக கட்டமைப்பில் சேர்க்கப்படுகிறது.
அடுத்ததாக, அல்ஜுனிட்-ஹவ்காங், நீ சூன், செங்காங் ஆகிய வட்டாரங்களில் உள்ள வீவக குடியிருப்புக் கட்டடங்களில் சூரியசக்தித் தகடுகள் பொருத்தப்படவுள்ளன. 55 தொடக்கப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், கூ டெக் புவாட் மருத்துவமனையின் 'பி' கோபுரம், வெளியுறவு அமைச்சின் தலைமையகம் உட்பட மேலும் 104 அரசாங்கக் கட்டடங்களில் சூரியசக்தித் தகடுகள் பொருத்தப்படும்.
சூரியசக்தித் தகடுகளைப் பொருத்தும் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்க அரசாங்கத்தின் சோலார்நோவா திட்டத்தின்கீழ் நேற்று ஏலக்குத்தகை நடத்தப்படும்.
தொடர்புடைய செய்திகள்
பொருத்தப்படும் சூரியசக்தித் தகடுகள் 113 மெகாவாட்-பீக் அளவு சூரியசக்தியைப் பெறக்கூடியவை. இந்த அளவு சூரியசக்தி 28,250 நான்கறை வீடுகளுக்குத் தேவையான எரிசக்தியை வழங்கக்கூடியது.
வீவக குடியிருப்புப் பேட்டைகளில் எரிசக்தி பயன்பாட்டை மேலும் குறைக்க வீவக புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. மின்தூக்கிகள் நகரும்போதும் அல்லது நிறுத்தப்படும்போதும் பெறப்படும் எரிசக்தியைப்
பயன்படுத்தி மின்தூக்கி விளக்கு, காற்றோட்டக் கருவி, காட்சிப் பலகை ஆகியவை இயக்கப்படும்.