தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

செந்தோசாவில் சூரியசக்தித் தகடுகள் பொருத்தப்பட்ட நடைபாதைகள்

2 mins read
536148d0-a572-442b-9339-05b45cd2c6f2
சூரியசக்தித் தகடுகளை அதிகளவு பயன்படுத்த செந்தோசா மேம்பாட்டுக் கழகம் முயற்சி எடுத்து வருகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் ‘சூரியசக்தித் தகடுகள் பொருத்தப்பட்ட முதல் நடைபாதை’ அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் செந்தோசாவின் ‘ஃபோர்ட் சிலோசோ ஸ்கைவாக்’கில் அமைக்கப்படும் என செந்தோசா மேம்பாட்டுக் கழகம் தெரிவித்தது.

கரிம வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த செந்தோசா தீவு மேற்கொள்ளும் முயற்சிகளில் இது ஒரு பகுதி எனவும் இதுமூலம் சூரிய சக்தியைத் திறம்பட பயன்படுத்துவதற்கான புதிய வழிகளை ஆராய முடியும் எனவும் அது கூறியது.

சூரியசக்தித் தகடுகள் பொருத்தப்பட்ட நடைபாதையின் மீது பாதசாரிகள் நடக்க முடியும் எனவும் அது குறிப்பிட்டது.

சூரியசக்தித் தகடுகளைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதில் செந்தோசா மேம்பாட்டுக் கழகம் மிகவும் தீவிரம் காட்டி வருகிறது. இவ்வாண்டு சூரிய சக்தி உச்சநிலையின்போது 5.2 மெகாவாட் மின்சாரத்தை அது உற்பத்தி செய்தது.

சூரியசக்தி உச்சநிலையான 3 மெகாவாட்டை விட இது 68 விழுக்காடு அதிகம்.

2030ஆம் ஆண்டிற்குள் கரிம வெளியேற்றம் நடுநிலையை அடைவதற்கு உதவும் பிற திட்டங்களையும் செந்தோசா கொண்டுள்ளதாக கூறப்பட்டது.

கரிம வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த செந்தோசா தீவு மேற்கொள்ளும் பல வழிகளில் சூரியசக்திப் பயன்பாட்டை அதிகரிப்பதும் ஒன்றாகும் எனக் கழகத்தின் திட்டமிடல் பிரிவுக்கான இயக்குநர் லீ செ சியன் செந்தோசா தீவில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறினார்.

அதன் அனைத்துக் கட்டடங்களிலும் ஆற்றல் திறன், கழிவு மேலாண்மை ஆகியவற்றை மேம்படுத்துவது போன்றவை அதன் கரிம வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் அடங்கும் என அவர் குறிப்பிட்டார்.

சூரியசக்தித் தகடுகளை அமைப்பதற்கு அதன் பங்காளிகளுடன் இணைந்து கழகம் தீவிரமாக உழைத்து வருகிறது எனவும் செந்தோசா தீவின் 46 இடங்களில் சூரியத் தகடுகள் அமைக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்