வீட்டு முகவரியை புதுப்பிக்கத் தவறியதற்காக தெம்பனிஸ் சங்காட் தனித்தொகுதி வாக்காளர் ஒருவருக்கு வாய்மொழி உத்தரவு வழங்கப்பட்டு உள்ளது.
‘ஈஸ்ட் கோஸ்ட் 42’ வாக்குப் பதிவு வட்டாரத்தின் ஒற்றை வாக்காளரான அந்த ஆடவர், தாம் தொழில் புரியும் தெம்பனிஸ் தொழில் பூங்கா முகவரியை தமது வீட்டு முகவரியாகக் கொடுத்து இருந்தார்.
அந்தத் தொழில் பூங்கா முகவரியில் 2020ஆம் ஆண்டு சிறிது காலம் அவர் தற்காலிகமாக தங்கி இருந்தார் என்றும் அப்போது அதனையே தமது வீட்டு முகவரியாகப் பதிவு செய்திருந்தார் என்றும் குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையமும் தேர்தல் துறையும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) வெளியிட்ட கூட்டறிக்கையில் குறிப்பிட்டு உள்ளன.
ஆனால், 2022ஆம் ஆண்டு வீட்டு முகவரியில் குடியேறிய பின்னரும் அவர் அந்தப் புதிய முகவரியைப் பதிவு சட்டப்படி பதிவு செய்யவில்லை.
புதிய முகவரிக்கு மாறிய 28 நாள்களுக்குள் அதனைப் பதிவுசெய்ய வேண்டும் என தேசியப் பதிவுச் சட்டம் வலியுறுத்துகிறது.
இந்தச் சம்பவத்தில் குற்றத்தின் சாயல் எதுவும் இல்லை என்பதாலும் தேசிய பதிவுச் சட்டத்தின்கீழ் ஆடவர் முதல்முறை குற்றம் புரிந்துள்ளார் என்பதாலும் அவருக்கு வாய்மொழி உத்தரவு வழங்க முடிவு செய்யப்பட்டதாக அறிக்கை கூறியது.
தற்போது அவர் புதிய முகவரியைப் பதிவு செய்துள்ளார். அடுத்த முறை வாக்காளர் பதிவேடு புதுப்பிக்கப்படும்போது அதில் அந்த முகவரி இடம்பெறும்.
தேர்தல் தொகுதி எல்லை மறுஆய்வுக் குழுவின் அறிக்கை மார்ச் 11ஆம் தேதி வெளியிடப்பட்ட பின்னர், ஆடவர் முகவரியை மாற்றாத விவரம் தெரிய வந்தது.
தொடர்புடைய செய்திகள்
வீடுகள் எதுவும் இல்லாத ‘ஈஸ்ட் கோஸ்ட் 42’ வாக்குப் பதிவு வட்டாரத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரே வாக்காளராக அவர் இருந்தார். அந்த வட்டாரம் புதிதாக உருவாக்கப்பட்ட தெம்பனிஸ் சங்காட் தனித்தொகுதிக்கு உட்பட்டது.
அந்த வாக்காளர் 53 வயது ஆடவர் என்றும் சொந்தமாகத் தொழில் நடத்துபவர் என்றும் தெரிய வந்தது. அவர் தமது பெயரை இயோ என்றும் மட்டும் குறிப்பிட்டார் என ‘ஏஷியாஒன்’ செய்தித்தளம் குறிப்பிட்டு உள்ளது.