மின்னியல் சாலைக் கட்டணம் (ERP) செலுத்துவதற்கான உள்வாகனச் சாதனத்தைப் (OBU) பொருத்திய பிறகு பிரச்சினைகளை எதிர்கொண்டதாக கார் ஓட்டுநர்கள் ஏறக்குறைய 5,400 பேர் தெரிவித்துள்ளனர்.
இதுவரை ஏறத்தாழ 300,000 கார்களில் அந்தச் சாதனம் பொருத்தப்பட்டுள்ளது. அவற்றில் இவ்வாறு பிரச்சினைக்குள்ளான கார்களின் விகிதம் 1.8 விழுக்காடாகும்.
மே மாத நிலவரப்படி மொத்தம் 500,000க்கும் அதிகமான வாகனங்களில் ‘ஓபியூ’ சாதனம் பொருத்தப்பட்டிருப்பதாக நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியது.
2026ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூரிலுள்ள வாகனங்கள் அனைத்திலும் ஏறக்குறைய 1 மில்லியன் சாதனங்களைப் பொருத்துவது ஆணையத்தின் இலக்கு.
சிங்கப்பூரில் அடுத்த தலைமுறை மின்னியல் சாலைக் கட்டண முறையான ‘இஆர்பி 2.0’க்கு மாறுவதற்கான செயல்திட்டத்தின் ஓர் அங்கமாக ‘ஓபியூ’ சாதனங்கள் விளங்குகின்றன. இவற்றின் மூலம் சாலைக் கட்டணம் மட்டுமன்றி கார் நிறுத்துமிடக் கட்டணங்களையும் செலுத்தலாம்.
எந்தவொரு புதிய தொழில்நுட்பமும் பேரளவில் நடைமுறைக்கு வரும்போது சில வாகனங்கள் பிரச்சினைகளை எதிர்கொள்வது வழக்கம் என்றும் அதன் தொடர்பில் சோதனைகள் இடம்பெறும் என்றும் ஆணையத்தின் பேச்சாளர் கூறினார்.
வாகன ஓட்டிகள் சிலர், ‘ஓபியூ’ சாதனத்தைப் பொருத்திய பிறகு தங்களால் கார் நிறுத்துமிடங்களில் நுழையவோ சாலைக் கட்டணத்தைக் கட்டவோ இயலவில்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினர்.
இந்த உள்வாகனச் சாதனங்களைப் பொருத்துமிடங்களில் ஒன்றான ‘லிம் டான் மோட்டார்ஸ்’ பட்டறையின் பேச்சாளர், தங்களிடம் சாதனத்தைப் பொருத்திக்கொண்டோரில் ஐந்து விழுக்காட்டினர் மீண்டும் உதவி நாடி வந்ததாகக் கூறினார். அந்தப் பட்டறை இதுவரை ஏறத்தாழ 200 கார்களுக்கு ‘ஓபியூ’ சாதனத்தைப் பொருத்தியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
கார் நிறுத்துமிடங்களில் ‘ஓபியூ’ சாதனம் அடையாளம் காணப்படாததால் அவர்களால் உள்ளே நுழைய முடியவில்லை என்று தெரிகிறது.
பெரும்பாலும் வீடமைப்பு வளர்ச்சிக் கழக கார் நிறுத்துமிடங்களைவிடத் தனியார், வர்த்தகக் கட்டடக் கார் நிறுத்துமிடங்களில் பிரச்சினைகள் எழுந்தன.
சிலர், சாதனத்தைப் பொருத்திச் சில மாதங்களுக்குப் பிறகு அதன் தொடுதிரை செயலிழந்துவிட்டதாகப் புகாரளித்தனர்.
வாகனத்தின் அளவைப் பொறுத்து ‘ஓபியூ’ சாதனத்தைப் பொருத்துவதற்கு 2 முதல் 4 மணி நேரம் வரை பிடிக்கும். அதிலுள்ள பிரச்சினைகளுக்கான காரணத்தைக் கண்டுபிடித்துச் சரிசெய்யவும் கிட்டத்தட்ட அதேயளவு நேரமாகும்.
சில நேரங்களில் பழுதான சாதனத்தை மாற்ற நேரிடலாம்.
அத்தகைய சூழலில், வாகன ஓட்டிகள் தாங்கள் சாதனத்தைப் பொருத்திக்கொண்ட அதே பட்டறைக்குச் செல்லும்படி ஊக்குவிக்கப்படுவதாக ஆணையத்தின் பேச்சாளர் கூறினார். அந்தப் பட்டறையில், சாதனம் குறித்த தகவல்களுக்கான பதிவுகள் இருக்குமென்பதால் பிரச்சினைக்கான காரணத்தைக் கண்டறிவது எளிது என்றார் அவர்.
மேல்விவரங்களுக்கு 6377 2255 என்ற தொலைபேசி எண்ணில் ‘இஆர்பி 2.0’ தொலைபேசி அழைப்புச் சேவையை நாடலாம்.