வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளுக்கான குத்தகை விதிமுறைகளை மீறியதற்காக, கடந்த சில ஆண்டுகளில் ஏறக்குறைய 70 வீடுகளை வீவக மீட்டுக்கொண்டு உள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டுக்கும் 2023ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் வீவக அதுபோன்ற 800 சம்பவங்களைக் கையாண்டு நடவடிக்கை எடுத்தது.
அனுமதி பெறாமல் வீட்டை வாடகைக்கு விடுவது, குறைந்தபட்சக் குடியிருப்புக் காலத்தில் வீட்டு உரிமையாளர் வீட்டில் தங்கி இராதது போன்ற விதிமுறை மீறல்களை உள்ளடக்கியவை அந்தச் சம்பவங்கள்.
இவற்றில் பாதிக்கும் மேற்பட்ட சம்பவங்களில் வீட்டு உரிமையாளர்களுக்கு எழுத்துபூர்வ எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஏறக்குறைய 330 உரிமையாளர்களுக்கு $50,000 வரை அபராதம் விதிக்கப்பட்டது.
இவை தவிர்த்த எஞ்சிய சம்பவங்களில் வீட்டை வலுக்கட்டாயமாக வீவக திரும்பப் பெற்றுக்கொண்டது.
இந்தத் தகவல்களை வீவக புதன்கிழமை (ஜூலை 24) அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
குறுகிய காலத்திற்கு வீடுகளை வாடகைக்கு விடுவது தொடர்பாக அண்மையில் ஊடகங்களில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து வீவக இந்த விவரங்களை வெளியிட்டது.
ஜூன் மாதம் சிஎன்ஏ வெளியிட்ட செய்தியில் கூட்டுரிமை வீடுகளும் (கொண்டோமினியம்) வீவக வீடுகளும் ‘ஏர்பிஎன்பி’ தளம் வழியாக குறுகிய காலத்திற்கு வாடகைக்கு விடப்படுவதாக அந்தச் செய்தி குறிப்பிட்டு இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
இவ்வாறு ஆண்டுதோறும் வீவக வீட்டு குத்தகை விதிமுறைகளை மீறும் சம்பவங்கள் 2019ஆம் ஆண்டு முதல் 2023 வரை பெரிய மாற்றமின்றி சீராக தொடர்ந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.
பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப் பெற்ற புகார்களைத் தொடர்ந்து வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அதன்வழியாக 800 சம்பவங்களும் வெளிச்சத்துக்கு வந்ததாக வீவக தெரிவித்தது.
கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை 29,000 சோதனைகளை அல்லது மாதம் 500 சோதனைகளை வீவக அதிகாரிகள் நடத்தினர்.
பொதுமக்களின் கருத்துகளுக்கு இணங்க மேலும் 4,400 சம்பவங்கள் தொடர்பில் வீவக அதிகாரிகள் விசாரணை நடத்தியதாகவும் அறிக்கை குறிப்பிட்டது.

