அடுத்த ஆண்டிலிருந்து சிங்கப்பூரில் தொற்றுநோய் பரவலைத் தடுக்கும் முன்னோடிப் பணியின் ஒரு பகுதியாக, மண்டாய் வனவிலங்குக் காப்பகத்தின் பூங்காக்களில் உள்ள சில பறவைகளுக்குப் பறவைக் காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசி போடப்படும்.
சிங்கப்பூர் பறவைக் காய்ச்சல் இல்லாத நாடாக நீடித்தாலும், உலகின் பல பகுதிகளில் இந்தக் கிருமி உள்ளது. மேலும் உலகளவில் தொடர்ந்து பரவி வருகிறது. இது விழிப்புணர்வின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று தேசிய பூங்காக் கழகம், மண்டாய் வனவிலங்குக் குழுமம் மற்றும் தடுப்பூசியை வழங்கும் ஒரு பிரெஞ்சு விலங்குச் சுகாதார நிறுவனம் ஆகியவை வியாழக்கிழமை (நவம்பர் 20) அன்று தெரிவித்தன.
மேலும், சிங்கப்பூர் புலம்பெயர்ந்த பறவைகளுக்கு ஒரு பிரபலமான இடமாகும். அந்தப் பறவைகளிடம் எச்5 பறவைக் காய்ச்சல் கிருமி இருக்கக்கூடும். இது ஐரோப்பாவில் ஏராளமான கோழிப் பண்ணைகளை அழித்த ஒரு கொடிய கிருமியாகும்.
மேலும் அமெரிக்காவில் உள்ள பசுக்கள், அண்டார்டிகாவிற்கு அருகிலுள்ள ஒரு தீவில் உள்ள நீர்நாய்கள் போன்ற பாலூட்டிகளுக்கும்கூட பரவியுள்ளது. 2022ஆம் ஆண்டில் மீண்டும் எழுச்சி கண்ட ஒரு தொற்றுநோய் இப்போது உலகில் பரவி வருகிறது.
மண்டாய் விலங்கியல் தோட்டங்களில் உள்ள இரை தேடும் பறவைகள் மற்றும் அழிந்து வரும் உயிரினங்கள், 2026 முதல் பிரெஞ்சு நிறுவனமான ‘செவா அனிமல் ஹெல்த்’ நிறுவனம் தயாரித்த எம்ஆர்என்ஏ (mRNA) தடுப்பூசியைப் பெறக்கூடும்.
‘பிராமிணி கைட்’ கழுகு, அழிந்து வரும் அரிய வெள்ளை முதுகுப் பருந்து, ‘மார்பல் டக்’ வாத்து ஆகியவை அவற்றில் அடங்கும்.
நவம்பர் 19 அன்று, தேசிய பூங்காக் கழகம், மண்டாய் வனவிலங்குக் குழுமம், சேவா மற்றும் சேவை வனவிலங்கு ஆய்வு நிதியம் ஆகியவை இணைந்து முன்னோடி தடுப்பூசித் திட்டத்தை நடத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
தடுப்பூசி போடும் முன்னோடித் திட்டம் குறைந்தபட்சம் ஓராண்டு காலம் எடுக்கும். அதன் தொடர்பில் மேலும் கூடுதல் தகவல்கள் கிடைக்கும்போது பகிரப்படும் என்று தேசிய பூங்காக் கழகம், மண்டாய் வனவிலங்குக் குழுமம் ஆகியவை தெரிவித்தன.
தொடர்புடைய செய்திகள்
இந்தத் திட்டம் ஒரு சிறிய, தேர்ந்தெடுக்கப்பட்ட இனங்களின் குழுவுடன் தொடங்கலாம். அதிகபட்சம் பத்து இனங்கள் வரை இதில் சேர்க்கப்படலாம். மண்டாய் வனவிலங்குக் குழுமம் மற்றும் தேசிய பூங்காக் கழகம் ஆகியவை முடிவுகளை உன்னிப்பாகக் கண்காணித்து, கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், காலப்போக்கில் கூடுதல் இனங்களுக்கு இந்தத் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை மதிப்பீடு செய்யும்.
“குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பறவைகளுக்கு தடுப்பூசி போடுவது முதன்மையான குறிக்கோள் அல்ல. மாறாக, முடிந்தவரை பல பறவை இனங்களிடையே அதிக பாதிப்பை ஏற்படுத்தும் பறவைக் காய்ச்சலுக்கு எதிரான பாதுகாப்பை மேம்படுத்துவதாகும்,” என்று அந்த அமைப்புகள் கூறின.

