தேசிய தின அணிவகுப்பில் முதன்முறையாக உடற்குறையாளர் அணி

தேசிய தின அணிவகுப்பில் முதன்முறையாக உடற்குறையாளர் அணி

3 mins read
8ffcdc31-9638-42c9-9230-61d1f7210f27
முன்னாள் திடல்தட விளையாட்டாளர் யாப் சியான் யின் (சக்கர நாற்காலியில்) தலைமையில், சிங்கப்பூர் உடற்குறையாளர் விளையாட்டு மன்றத்தைச் சேர்ந்த 16 பங்கேற்பாளர்கள் தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்பர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

உடற்குறையாளர்களை மட்டுமே முழுமையாக உள்ளடக்கிய அணிவகுப்புப் பிரிவு, முதன்முறையாக இவ்வாண்டு தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்கவுள்ளது.

முன்னாள் திடல்தட விளையாட்டாளர் யாப் சியான் யின் தலைமையில், சிங்கப்பூர் உடற்குறையாளர் விளையாட்டு மன்றத்தைச் (SDSC) சேர்ந்த 16 பங்கேற்பாளர்கள், தேசிய விளையாட்டரங்கில் அணிவகுத்துச் செல்லும் பொதுமக்களுடன் இணைந்து பங்கேற்பர்.

அந்த 16 பேர் குழுவில் உடற்குறையுள்ளோரும் மதியிறுக்கக் குறைபாடுள்ளோரும் இடம்பெறுவர்.

‘தொடுவானம் நோக்கி’ (Majulah Singapura, Go Beyond!) என்பது இவ்வாண்டு தேசிய தின அணிவகுப்பின் கருப்பொருள்.

சிங்கப்பூரர்களின் முன்னேற்றத்தை நோக்கிய உறுதியையும் ஒருவரையொருவர் ஆதரித்து அக்கறையுடன் வாழும் மனப்பான்மையையும் இக்கருப்பொருள் பிரதிபலிக்கிறது. 

“நாம் வெவ்வேறு பின்னணிகளிலிருந்து வந்திருந்தாலும், வெவ்வேறு திறன்களைக் கொண்டிருந்தாலும், சிங்கப்பூரர்களாகிய நம் அனைவருக்கும் நாட்டின்மீது ஒரே அளவிலான அன்பும் பற்றும் உள்ளது,” என்றார் 45 வயது கர்னல் லாவ் கை ஹெங் அந்தோணி. சிங்கப்பூர் ஆகாயப்படையில் பணியாற்றி வரும் அவர், இவ்வாண்டு அணிவகுப்பு மற்றும் சடங்குமுறைக் குழுத் தலைவராக இருந்து தேசிய தினக் கொண்டாட்டத்திற்கான திட்டமிடல் பணிகளில் உதவி செய்து வருகிறார்.

கடந்த 10 ஆண்டுகளாக பாடாங்கிலும் மரீனா பே மிதக்கும் மேடையிலும் நடத்தப்பட்ட தேசிய தின அணிவகுப்பு, இவ்வாண்டு தேசிய விளையாட்டரங்கில் நடத்தப்படுகிறது. இது 2016ஆம் ஆண்டு அதே அரங்கில் நடைபெற்ற தேசிய தின அணிவகுப்பின் நினைவுகளை மீட்டெடுப்பதாக அமைகிறது. இந்த இடமாற்றத்தைத் தொடர்ந்து நடத்தப்படவிருக்கும் கொண்டாட்டத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

சிங்கப்பூரின் 61வது தின அணிவகுப்பை 42,000 பார்வையாளர்கள்வரை அரங்கத்தில் அமர்ந்து நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கலாம் . 

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

தேசிய விளையாட்டாரங்கத்தில் அந்நிகழ்ச்சி நடைபெறுவதால் செஞ்சிங்கங்களின் (Red Lions) வான்குடை சாகசமும், பீரங்கி வாகனங்கள், கவச வாகனங்கள் மற்றும் அவசரகால வாகனங்கள் அடங்கிய தற்காப்பு வாகன அணிவகுப்பும் (Mobile Column) இடம்பெறாது. அவற்றுக்குப் பதிலாக சில புதிய அங்கங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

ஆளில்லா வானூர்திக் காட்சி, ‘ஃபோ-டி-ஜுவா’ (Feu-de-Joie) எனப்படும் முப்படையினரின் பாரம்பரியத் துப்பாக்கி வணக்கம், விளையாட்டு வீரர்களால் வழிநடத்தப்படும் தேசியக் கொடித் தொடரோட்டம் போன்ற சிறப்பம்சங்களும் அணிவகுப்பை அலங்கரிக்கவுள்ளன.

தேசிய தின அணிவகுப்பில் 32 அணிகள் கலந்துகொள்ளவுள்ளன. குறிப்பாக, 1,200க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களைக் கொண்ட, பொதுமக்கள் மற்றும் தனியார் அமைப்புகளைச் சேர்ந்த 26 அணிகளும் அதில் பங்கேற்கின்றன. இது, கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலான தேசிய தின அணிவகுப்பு வரலாற்றில், பொதுமக்களின் மிகப்பெரிய பங்களிப்பாகக் கருதப்படுகிறது. 

“தேசிய தின அணிவகுப்பு என்பது சிங்கப்பூரையும் அதன் வரலாற்றையும் கொண்டாடும் ஒரு முக்கிய நிகழ்வாகும். அதில் ஒரு சிறிய பங்காற்றுவது எனக்கு மிகுந்த பெருமையையும் சிறப்பையும் அளிக்கிறது,” என்று இவ்வாண்டு அணிவகுப்பில் பங்கேற்கவிருக்கும் 20 வயது அரிவன் கவின் கூறினர். அவர் சிங்கப்பூர்க் காவல்துறை மரியாதைக் காவல் அணியின் உறுப்பினராகப் பங்கேற்கிறார்.  

கவினின் தேசிய சேவைப் பயணம் மிகவும் சுவாரசியமானது. தமது பயிற்சியின் தொடக்கக் கட்டத்தில் அவர் சிங்கப்பூர் ஆயுதப் படையில் பணியாற்றினார். பின்னர், சிங்கப்பூர்க் காவல்துறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது அதிகாரியாகப் பயிற்சி பெற்று வருகிறார்.

பல புதிய மாற்றங்களுடன் நடைபெறும் இவ்வாண்டின் தேசிய தினக் கொண்டாட்டம், சிங்கப்பூரர்களின் அடையாளத்தையும் ஒற்றுமையையும் முன்னிறுத்தும் வகையில், அனைவரையும் கவரும் புதுமையான நிகழ்ச்சிகளைக் கொண்டுள்ளது .

குறிப்புச் சொற்கள்