தேசிய பூங்காக் கழகம் கோனி தீவில் மரங்கள் சார்ந்த மாற்று நடவடிக்கைகளை கடந்த ஆண்டுமுதல் மேற்கொண்டு வந்துள்ளது.
சிங்கப்பூரிலேயே தனித்துவமாக வளரக்கூடிய அரியவகை மரங்களை அது அத்தீவில் நட்டுள்ளது. ஆயினும் அதனை ஏற்கனவே இருந்த 102 கஷரினா மரங்களை அகற்றிய பிறகு செய்துள்ளது.
கஷரினா மரங்களுக்கு மாற்றாக மரங்கள் நடப்பட்டது, சிங்கப்பூரின் பல்லுயிர் வளத்தை பெருக்கவே மேற்கொள்ளப்பட்டது என்று கழகம் விளக்கம் அளித்தாலும் கடற்கரையோரங்களில் பரவலாகக் காணப்படும் கஷரினா மரங்களை அகற்றியது ஒருசிலரை கவலைக்கு உள்ளாக்கியுள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட், அக்டோபர் மாதங்களில் கஷரினா மரங்கள் அகற்றப்பட்டதாகக் கழகம் தெரிவித்தது.
கோனி தீவில் கஷரினா மரங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. குழந்தைகள் விளையாட்டுத் தளம் ஒன்று அந்த மரத்தின் பெயரில் உள்ளது. மேலும் சாய்ந்து விழுந்துவிட்ட கஷரினா மரங்களைக் கொண்டு பொதுமக்கள் அமரக்கூடிய இருக்கைகள் அங்கு அமைக்கப்பட்டிருப்பதும் அதன் தனிச்சிறப்பை விளக்குகிறது.
அந்தப் பூங்காவை அண்மையில் சென்று பார்த்த சிலர் கஷரினா மரங்களைக் காண்பது அரிதாக உள்ளது என்று கருத்துரைத்துள்ளனர். கடந்த ஜனவரி 19 அன்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகம் சென்றிருந்தபோது 81 ஹெக்டர் பரப்பளவுள்ள பூங்காவில் தேசிய பூங்காக் கழகம் அறிவிப்புப் பலகையொன்றை ஓரிடத்தில் வைத்திருந்தது.
அந்த அறிவிப்பில், கஷரினா மரங்கள் பல காரணங்களுக்காக அகற்றப்பட்டுள்ளன என்றிருந்தது. குறிப்பாக அவை சாய்ந்து விழக்கூடிய தன்மையுள்ளதால் பாதுகாப்பு கருதியும் தீவில் வளரக்கூடிய வேறு அரிய மரங்களை நடவேண்டிய அவசியத்தாலும் அவை அகற்றப்பட்டன என்று விளக்கப்பட்டிருந்தது.

