கட்டுமானப் பணியால் இணையச் சேவை பாதிப்பு

கட்டுமானப் பணியால் இணையச் சேவை பாதிப்பு

2 mins read
149f2154-25ff-4300-b810-ae68eded30dc
ஏப்ரல் 18 காலை 10.35, 10.55 இடைப்பட்ட நேரத்தில் ஏறக்குறைய 278 வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டனர். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்டெல், ஸ்டார்ஹப், எம்1 உள்ளிட்ட பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்களின் 5,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் சனிக்கிழமை (ஏப்ரல் 18) இணையத் தொடர்பை பயன்படுத்த முடியாமல் பாதிக்கப்பட்டனர்.

காலை 10.30 மணியளவில் அகண்டவரிசை இணையத் தொடர்பில் இடையூறு ஏற்படத் தொடங்கியதாக டௌன்டிடெக்டர் தெரிவித்தது.

சிம்பா, மைரிபப்ளிக், வியூகுவெஸ்ட் ஆகியவற்றின் இணையச் சேவைகளையும் பயன்படுத்த முடியவில்லை.

காலை 10.35 மணிக்கும் 10.55 மணிக்கும் இடையிலான உச்ச நேரத்தில் சிங்டெல்லின் 278 வாடிக்கையாளர்களும் ஸ்டார்ஹப் வாடிக்கையாளர்களும் எம்1 வாடிக்கையாளர்களும் இது குறித்து புகாரளித்திருந்தனர்.

முன்னதாக காலை 11.45 மணியளவில் ஃபேஸ்புக்கில் சிங்டெல் பதிவு ஒன்றை வெளியிட்டது. அதில் சில கட்டுமானத் தளங்களில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் தொடர்பில் இந்தச் சிக்கல் ஏற்பட்டிருக்கலாம் என்று அது கூறியது.

“எங்களுடைய பொறியாளர்கள் நிலைமையை ஆராய்ந்து வருகின்றனர். இதனால் ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம். விரைவில் கூடுதல் தகவல்களை வெளியிடுவோம்,” என்று சிங்டெல் அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தது.

இதற்கிடையே, கட்டுமானப் பணிகளால் இணையச் சேவை பாதிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.

அங் மோ கியோ, பீஷான், செங்காங் மற்றும் பொங்கோலில் உள்ள 5,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் சேவைத் தடையால் பாதிக்கப்பட்டனர்.

சிங்கப்பூரின் கண்ணாடி இழை இணையத் தொடர்புக்கான கட்டமைப்புகளை நிறுவி இயக்கிவரும் நெட்லிங்க் டிரஸ்ட், இணையச் சேவை பாதிக்கப்பட்டதற்கான காரணத்தை விளக்கியது.

கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட மூன்றாம் தரப்பு ஒப்பந்ததாரரால் இணையச் சேவையில் தடங்கல் ஏற்பட்டதாக பிற்பகல் 3 மணியளவில் தனது இணையத்தளத்தில் வெளியிட்ட தகவலில் அது தெரிவித்தது.

பாதிக்கப்பட்ட சேவையை மீட்டெடுக்கும் பணியில் அந்நிறுவனத்தின் குழு ஈடுபட்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்