மத்திய கிழக்குப் பூசலால் சிங்கப்பூர் குடும்பங்களுக்கும் வர்த்தகங்களுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்பைக் குறைக்க இவ்வாண்டு வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட ஆதரவுத் திட்டங்களில் சில திட்டமிடப்பட்டதற்கு முன்னரே செயல்படுத்தப்படும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
அதோடு, பூசலால் ஆக அதிகம் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு அரசாங்கம் குறிப்பிட்ட வகையில் ஆதரவு வழங்கும் என்றும் தற்போது நடப்பில் உள்ள நடவடிக்கைகள் மேம்படுத்தப்படும் என்றும் அவர் வியாழக்கிழமை (ஏப்ரல் 2) தெரிவித்தார். அடுத்த வாரம் நாடாளுமன்றம் கூடும்போது அமைச்சர்கள் கூடுதல் விவரங்களை வழங்குவர் என்று நிதி அமைச்சருமான திரு வோங் சொன்னார்.
மின்சார, நீர்ப் பயன்பாட்டுக்கு விலைத் தள்ளுபடி உள்ளிட்ட திட்டங்கள் கடந்த பிப்ரவரி மாதம் இடம்பெற்ற 2026 வரவுசெலவுத் திட்ட உரையில் அறிவிக்கப்பட்டன.
“எண்ணெய் விலை அதிகரித்துள்ளதாலும் நிலையற்ற சூழல் தொடர்வதாலும் அரசாங்கம் மேலும் ஆதரவளிக்கும்,” என்று திரு வோங் கூறினார்.
இந்த விவகாரத்தில் தேசிய அளவில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை ஆராய உள்நாட்டு நெருக்கடி அமைச்சர்கள்நிலைக் குழுவை (Homefront Crisis Ministerial Committee) திரு வோங் அமைத்துள்ளார். தேசியப் பாதுகாப்பு அமைச்சர் கா. சண்முகம் அக்குழுவுக்குத் தலைமை தாங்குவார், துணைப் பிரதமர் கான் கிம் யோங் ஆலோசகராகப் பொறுப்பு வகிப்பார்.
அந்தக் குழு தங்கள் பணியைத் தொடங்கிவிட்டதாகவும் தற்போதுள்ள நெருக்கடிநிலைத் திட்டங்களை மாற்றியமைப்பதுடன் புதிய திட்டங்களை உருவாக்கி வருவதாகவும் காணொளிவழிப் பேசிய திரு வோங் குறிப்பிட்டார். அந்தக் காணொளி சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவரப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமையும் என்று அரசாங்கம் நம்பிக்கை கொண்டிருந்தாலும் பூசலால் ஏற்படும் தாக்கம் கூடுதல் காலத்துக்குத் தொடரும் என்று அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எரிசக்தித் தயாரிப்பு மற்றும் விநியோக உள்கட்டமைப்பு சேதமடைந்துள்ளதால் அவற்றை இயல்புநிலைக்குக் கொண்டுவர பல மாதங்கள் ஆகலாம்; அதனால், விலை சில காலத்துக்கு ஏற்றமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக திரு வோங் சுட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
வரும் நாள்களிலும் வாரங்களிலும் பூசல் மேலும் மோசமடையும் சாத்தியத்தையும் சிங்கப்பூர் கருத்தில்கொண்டு செயல்படவேண்டும் என்றும் அவர் கூறினார். பூசல் கூடுதல் பகுதிகளுக்குப் பரவும் அபாயம் நிலவுவது அதற்குக் காரணம் என்றார் அவர்.
சிங்கப்பூரின் எரிசக்தி, விநியோகச் சங்கிலி ஆகியவற்றின் மீள்திறனை வலுப்படுத்த அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக திரு வோங் தெரிவித்தார். அந்தந்த நேரத்தில் ஏற்படுகின்ற இடையூறுகளை சிங்கப்பூர் இதுவரை சமாளித்து வந்துள்ளதாகவும் அவர் சொன்னார்.

