பச்சைப் பசேல் என அடர்த்தியாக வளர்ந்து நல்ல நிழல் தரும் ‘காயா’ என்ற ஒருவகை மரங்கள் கடந்த 1980ஆம் ஆண்டுகளில் சிங்கப்பூரில் பரவலாக நடப்பட்டன.
வீடமைப்பு வளர்ச்சிக் கழக வட்டாரங்களில் உள்ள பல குடியிருப்பாளர்கள் ஆச்சரியப்படும் விதமாக, தற்போது அந்த வகை மரங்களும் ‘சீ ஆப்பிள்’ என்ற மற்றொரு வகை மரங்களும் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன.
மரங்களின் அடிவேர்களில் ஏற்படக்கூடிய பூஞ்சை நோயால் அவை வலுவிழந்து, கிளைகள் சேதமடைந்து, சில காலம் கழித்து விழவும் வாய்ப்புள்ளது.
எனவே பாதுகாப்புக் காரணங்களால் அவற்றை வேரோடு அகற்ற வேண்டியுள்ளது என்று தேசிய பூங்காக் கழகத்தின் சாலைவடிவமைப்புப் பிரிவின் இயக்குநர் ஓ சியாவ் ஷெங் தெரிவித்தார்.
ஆப்ரிக்காவில் அதிகம் காணப்படும் காயா மரங்கள் வெப்பமான சூழலிலும் நன்கு வளர்ந்து 30 மீட்டர் உயரம் வரை எட்டக்கூடியவை. அதனால் நகர்ப்புறங்களில் அவற்றை கழகம் கடந்த ஆண்டுகளில் அதிகமாக நட்டது.
பல நாள்களாக நெடிதுயர்ந்து வளர்ந்த மரங்களை இழப்பது கவலை தருகிறது என்று குடியிருப்பாளர்கள் சிலர் வருத்தம் தெரிவித்தனர்.

