தேர்தலில் தோல்வியுறும் மக்கள் செயல் கட்சி வேட்பாளர்கள் தஞ்சம் புகுமிடம் தேசியத் தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) என்று பாட்டாளிக் கட்சித் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் சொன்னதில் எந்த உண்மையும் இல்லை என்று ஜாலான் காயு தனித்தொகுதிக்கான மக்கள் செயல் கட்சி வேட்பாளர் இங் சீ மெங் கூறியுள்ளார்.
ஜாலான் காயு தனித்தொகுதி, கெபுன் பாரு தனித்தொகுதி, அங் மோ கியோ குழுத்தொகுதிகளுக்கான மசெக பிரசாரக் கூட்டம் ஃபெர்ன் கிரீன் தொடக்கப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 27) நடைபெற்றது.
அதில் பேசிய என்டியுசி தலைமைச் செயலாளரான திரு இங், “நாடாளுமன்ற உறுப்பினர்களைப் போலவே, தேசியத் தொழிற்சங்க காங்கிரசின் தலைமைச் செயலாளர், ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கும் ஊழியர்களாலும் தொழிற்சங்கங்களாலும் தேர்ந்தெடுக்கப்படுகின்றார். தஞ்சம் புகுமிடம் என்பதே இல்லை. உங்களுக்காகப் பணியாற்ற வேண்டும் என விரும்பியே நான் முன்னிற்கிறேன்,” என்றார்.
மேலும், அலியான்ஸ்-இன்கம் ஒப்பந்தம் பற்றிப் பிரசாரப் பயணங்களின்போது எழுப்பப்படும் கேள்விகள் குறித்துப் பேசிய அவர், “அது நல்லெண்ணத்துடன் மேற்கொள்ளப்பட்ட முயற்சி,” என்றார்.
குறிப்பாக, இன்கம் நிறுவனத்தின் நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தல் நிலவிய காலகட்டம் இருந்தது. முன்மொழியப்பட்ட அத்திட்டம், நிறுவனத்தை வலுப்படுத்துவதுடன் சந்தாதாரர்களின் நலனையும் பேணியிருக்கும் என்றார்.
மேலும், இன்கம் நிறுவனத்தின் பங்குகள் கடந்த பத்தாண்டுகளில் 20 விழுக்காட்டிலிருந்து ஆறு விழுக்காடாகச் சரிந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.
“வலுவடைந்த அந்நிறுவனம் தேசியத் தொழிற்சங்க காங்கிரசின் சமூகப் பணியையும் உறுதிசெய்யும் என்பது எங்கள் சிந்தனையாக இருந்தது,” என்றார் அவர். இருப்பினும், பிற தகவல்கள் வெளிவந்ததையடுத்து அரசாங்கம் வேறு கண்ணோட்டத்தில் ஆராய்ந்து, சட்டப்படி அதை முடிவுக்குக் கொண்டுவந்தது,” என்று திரு இங் சொன்னார்.
அரசாங்கத்தின் முடிவை ஒப்புக்கொண்டதுடன், மக்களின் கருத்துகளையும் தாம் மதிப்பதாகவும் அதுகுறித்த மதிப்பாய்வைத் தொடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
“என்டியுசி செயல்பாடுகள் போதுமானவையாக இல்லையென்பது வருத்தமளிக்கிறது. எனினும், இயன்றவரை சிறப்பாகச் செயல்படுகிறோம். பாடம் கற்று மேம்படுவோம்,” என்றார் திரு இங்.