சிங்கப்பூரில் 27 வயது மகன் எட்டோமிடேட் கலந்த மின்சிகரெட்டுகளின் புழக்கத்திற்கு அடிமையானதால் அவருக்கும் அவருடைய தாயாருக்கும் இடையிலான உறவு கசப்படைந்துள்ளது. இருவரும் ஒரு காலத்தில் நெருக்கமாக இருந்தனர். போதைப்பொருளின் பிடியில் சிக்கியிருந்த மகன் பென் (உண்மைப் பெயரன்று), ஒரு முறை தாயைத் தாக்கிக் காயம் ஏற்படுத்தியதாகக் கூறப்பட்டது.
மின்சிகரெட் புகைக்கும் பழக்கத்திலிருந்து விடுபட முடியாமல் அவர் தவித்தார்.
பென்னின் தாயாரான 56 வயது திருவாட்டி ரோஸ் (உண்மைப் பெயரன்று) மகனிடமிருந்து தற்காத்துக்கொள்ளத் தனிப்பட்ட பாதுகாப்பு உத்தரவைப் பெற்றார். ஒற்றைப் பெற்றோரான அவருக்குக் குடும்ப ஆதரவு அவ்வளவு இல்லை. அதனால் மகன் கடுமையாகக் காயம் ஏற்படுத்திவிடுவாரோ என்று திருவாட்டி ரோஸ் அஞ்சினார்.
மின்சிகரெட் புழக்கத்தின் உச்சத்தில் இருந்தபோது பென் நாளொன்றுக்கு மூன்று மின்சிகரெட் போட்களைப் புகைப்பது வழக்கம்.
சென்ற ஆண்டு (2024) நவம்பரில், அவர் வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடி வீட்டின் சன்னலில் ஏறி உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றார். அவருடைய தாயார் தடுத்துநிறுத்த முயன்றபோது சத்தம் போட்ட பென், தாயாரின் கழுத்தை நெரித்துத் தலையைச் சுவரின் மீது மோதினார்.
அதற்காகவும் வேறொரு சம்பவத்திற்காகவும் திருவாட்டி ரோஸ், காவல்துறையின் உதவியை நாடினார்.
பென் இரண்டாவது முறை கைதான பிறகு, மனநலக் கழகத்தில் மூன்று வாரம் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் இரண்டு வாரம் தங்கியிருந்து சிகிச்சை பெற்றார்.
பின்னர் மறுவாழ்வு நிலையத்திற்குச் செல்ல அவர் முடிவெடுத்தார்.
தொடர்புடைய செய்திகள்
இந்த ஆண்டு (2025) செப்டம்பர் 3ஆம் தேதி பென் அங்கிருந்து வெளியேறினார்.
இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவேண்டும் என்பதற்காக ஆலோசனை வகுப்புகளுக்கு அவர் செல்கிறார்.
தாயார் ரோஸ் இப்போது சற்று நிம்மதியுடன் இருக்கிறார். ஆயினும் மகன் தவற்றை உணர்ந்து மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று அவர் நினைக்கிறார். முழுமையாக மீண்ட பிறகு தாயாரிடம் மன்னிப்புக் கேட்கத் திட்டமிட்டிருக்கிறார் பென்.
சிங்கப்பூரில் எட்டோமிடேட் இந்த ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதியிலிருந்து போதைப்பொருளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.