'ரெட் சுவஸ்திகா' பள்ளியில் பாதுகாவல் அதிகாரிமேல் காரை மோதப்போவதாக மிரட்டல் விடுத்த 61 வயது முதியவரின் மகன், தந்தை ஓட்டிய 'பென்ட்லி' காரின் வாகனப் பதிவெண் பலகையை மாற்றினார்.
இதன் தொடர்பில் அந்த 28 வயது ஆடவருக்கு வியாழக்கிழமை (பிப்ரவரி 23) $2,600 அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் 12 மாதங்கள் வாகனம் ஓட்டுவதற்கும் அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கிளின் நியோ ஜியா, வேறொரு காரின் வாகனப் பதிவெண் பலகையை எடுத்து 'பென்ட்லி' சொகுசுக் காரில் பொருத்தியதாகக் கூறப்பட்டது.
முறையான காப்பீடு இன்றித் தனது தந்தை அந்தக் காரை ஓட்டுவதற்கு அனுமதித்ததன் தொடர்பில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார்.
முன்னதாக, சென்ற ஆண்டு ஜனவரியில் அவரது தந்தை நியோ ஹோங் சை, தனது பேத்தியைப் பள்ளியில் விட அந்தக் காரை ஓட்டிச் சென்றார்.
பள்ளிக்குள் வாகனத்தை அனுமதிக்க மறுத்தார் அப்போது பணியில் ஈடுபட்டிருந்த 62 வயது பாதுகாவல் அதிகாரி.
ஆனால் நியோ, காரை அவர்மேல் மோதப்போவதாக மிரட்டியதுடன் மோதுவதைப்போல் முன்னே செலுத்தியதாகவும் கூறப்பட்டது.
அலட்சியமாக வாகனமோட்டி யதன் தொடர்பில் சென்ற அக்டோபர் மாதம் முதியவர் நியோவிற்கு எட்டு வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
முறையான காப்பீடு பெறாமல் அந்த காரை ஓட்டியதற்காக $600 அபராதமும் 12 மாதங்களுக்கு வாகனம் ஓட்டத் தடையும் விதிக்கப்பட்டன.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையில், 'பென்ட்லி' காரின் வாகனப் பதிவெண் பலகை 2021 மே மாதம் பதிவு நீக்கம் செய்யப்பட்ட 'பிஎம்டபிள்யூ' காருக்குச் சொந்தமானது என்று தெரியவந்தது.
அதை 'பென்ட்லி' காருக்கு மாற்றுவது தொடர்பில் விண்ணப்பம் ஏதும் செய்யப்படவில்லை என்று நிலப் போக்குவரத்து ஆணையம் சார்பாக வாதிட்ட வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
கார் வாங்கி, விற்கும் 'நியோ டைம்ஸ்' எனும் நிறுவனத்துக்குச் சொந்தமானது அந்த 'பென்ட்லி' கார். கிளின் நியோ டிசம்பர் 2021ல் அந்தக் காரை வாங்கியதாகக் கூறப்பட்டது.
பின்னர், புகைப்படம் எடுப்பதற்காக அதன் வாகனப் பதிவெண் பலகையை மாற்றியிருந்தார்.
வீட்டில் இருந்த அந்தக் காரின் சாவியை எடுத்த முதியவர் நியோ, பேத்தியைப் பள்ளிக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்பட்டது.
தந்தை காரை ஓட்டிச் சென்றது மகனுக்குத் தெரியாது என்றும் தெரிந்திருந்தால் அவர் அதற்கு ஒப்புக்கொண்டிருக்கமாட்டார் என்றும் நியோவின் வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
யாரையும் ஏமாற்றும் நோக்கில் அவர் வாகனப் பதிவெண் பலகையை மாற்றவில்லை.
காரை விற்பதற்காகப் புகைப்படம் எடுக்கும் நோக்கில் அவர் அவ்வாறு செய்தார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
வேறொரு காரின் வாகனப் பதிவெண்ணை 'பென்ட்லி' காரில் பொருத்திய குற்றத்துக்கு அவருக்கு ஐயாயிரம் வெள்ளி வரையிலான அபராதமோ 12 மாதங்கள் வரையிலான சிறைத்தண்டனையோ இரண்டுமோ விதிக்கப்பட்டிருக்கலாம்.
முறையான காப்பீடு பெறப்படாத வாகனத்தை ஓட்ட அனுமதித்த குற்றத்துக்கு மூன்று மாதங்கள் வரையிலான சிறைத்தண்டனையோ $1,000 அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.

