கத்தோலிக்கத் தொடக்கக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயிலும் 18 வயது மாணவன் அலிஃப் அகமது, 2020ஆம் ஆண்டில் தம் தந்தை எழுதிய ‘சிங்கப்பூரில் சரவணன்’ என்ற தமிழ் நாவலை 2025இல் ‘மூன்று இதயங்களும் ஒரு துயரமும்’ (Three hearts, One sorrow) எனும் நூலாக ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.
அண்மையில் நடந்த அந்நூல் வெளியீட்டு விழாவில், அதன் முதல் பிரதியை மொழிபெயர்ப்பு ஆசிரியர் அலிஃப் அகமதிடமிருந்து பெற்றுக்கொண்டார் ஜாலான் புசார் - வாம்போ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் லோ.
“தமிழ் இலக்கியம் பல நூற்றாண்டுகாலப் பாரம்பரியத்தையும் ஆழமான சிந்தனைகளையும் வாழ்வியல் விழுமியங்களையும் கொண்டுள்ளது. இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளதன் மூலம் தமிழ்மொழியை அறியாத சிங்கப்பூரர்களும் ஆங்கிலம் பேசுவோரும் தமிழர்களின் பண்பாடு, வரலாற்றுடன் அவர்களின் உணர்வுகளையும் புரிந்துகொள்ள முடியும். இது சிங்கப்பூர் போன்ற பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தின் ஒருமைப்பாட்டை வளர்க்கும்,” என்று திரு லோ கூறினார்.
சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய வட்டாரங்களில் அறிமுகமான எழுத்தாளர், பதிப்பாளர், தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகியுள்ள மில்லத் அகமது எழுதிய நாவல் ‘சிங்கப்பூரில் சரவணன்’. அது சிங்கப்பூரில் வாழும் வெளிநாட்டு ஊழியர்களின் வாழ்க்கையைச் சித்திரிக்கிறது. அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையும் பழக்கங்களையும் அந்த நாவல் படம்பிடித்துக் காட்டுகிறது.
‘சிங்கப்பூரில் சரவணன்’ நாவல் சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம் நடத்திய குறுநாவல் போட்டியில் வெற்றி பெற்று, 2020ஆம் ஆண்டு நூலாக அச்சிடப்பட்டது.
இதுவரை அமெரிக்கத் தமிழ்ப் பல்கலைக்கழக விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, புதுச்சேரி படைப்பாளர் இயக்க விருது, காஞ்சிபுரம் முத்தமிழ் மைய விருது, கள்ளக்குறிச்சி களரி காலை இலக்கிய விருது, இந்தியப் பாரம்பரிய கலை இலக்கிய விருது என ஆறு விருதுகளை அந்நூல் பெற்றுள்ளது.
அந்நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க திரு மில்லத் அகமதின் மகன் அலீஃப் அகமது மொழிபெயர்க்க ஆர்வத்துடன் முன்வந்தார்.
செயின்ட் பேட்ரிக்ஸ் பள்ளியில் உயர்நிலை நான்கில் பயின்றுகொண்டிருந்த அலீஃப், கல்விக்கு இடையே நேரம் கிடைத்தபோதெல்லாம் சிறிது சிறிதாக தந்தையின் நாவலை மொழிபெயர்க்க தொடங்கினார்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், 2024 டிசம்பர் மாதம் மொழிபெயர்ப்புப் பணிகள் நிறைவடைந்து சிங்கப்பூரின் அறுபதாம் ஆண்டு வைரவிழாவில் நாவலின் ஆங்கிலப் பதிப்பு வெளியீடு கண்டுள்ளது.
2013ஆம் ஆண்டு ஏற்பட்ட லிட்டில் இந்தியா கலவரத்தின் பின்னணியில் ‘சிங்கப்பூர் சரவணன்’ நாவலின் கதை தொடங்குகிறது. கலவரத்தில் இறந்துபோன சரவணன் என்பவரின் நல்லுடல் எப்படி அவரது தாய்நாட்டிற்குக் கொண்டுசெல்லப்படுகிறது என்பதே நாவலின் கரு.
மூவரின் வாழ்க்கைப் பின்னணிகளைச் சித்திரிக்கும் வகையில் நாவலை எழுதியுள்ளார் திரு மில்லத். மூன்று கோணங்களில் கதாபாத்திரத்தின் வாயிலாகக் கதை நகர்கிறது. காதல், நகைச்சுவை, சோகம் எல்லாம் நாவலில் அடங்கியுள்ளது.
“என் நாவலை என் மகனே மொழிபெயர்ப்பு செய்தது மகிழ்ச்சியும் பெருமிதம் அளிக்கிறது,” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார் திரு மில்லத்.

