உயர் நீதிமன்ற நீதிபதியாகக் கடந்த 2003ஆம் ஆண்டுமுதல் பணியாற்றிவரும் திரு சூ ஹான் டெக், இவ்வாண்டு பிப்ரவரி 20ஆம் தேதிமுதல் பதவி ஓய்வு பெறுகிறார் என்று சிங்கப்பூர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 13) தெரிவித்தது.
அன்றைய தினம் உயர் நீதிமன்ற நீதிபதி பணியில் அவரது கடைசி நாளாகும். எனவே அன்றுமுதல் அவர் பதவி ஓய்வு பெறுவதாக நீதிமன்ற அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
30 ஆண்டுகளாக அவர் நீதித்துறையில் சேவையாற்றியுள்ளார். அவர் நீதித்துறை ஆணையராக 1995ஆம் ஆண்டில் பணியமர்த்தப்பட்டார். அதன்பிறகு உயர் நீதிமன்ற நீதிபதியாக 2003ல் பதவியேற்றார்.
நீதித்துறையில் பலவித வழக்குகளில் அவர் முக்கியப் பங்களித்துள்ளார். குற்றவியல், வேலைவாய்ப்பு, உரிமை கோருதல் சார்ந்த வழக்குகளில் அவர் குறிப்பிடத்தக்க வகையில் சேவையாற்றியுள்ளார்.
உயர் நீதிமன்றத்தின் குடும்பப் பிரிவில் அவர் அண்மைய ஆண்டுகளில் அடிப்படை நிலையில் பணியாற்றினார். அவரது தீர்ப்புகள் குடும்பங்களில் எழுந்த சர்ச்சைகளில் நீதியை நிலைநாட்ட உதவியுள்ளன.
“நீதித்துறையில் அவர் முன்மாதிரியாகச் செயல்பட்டு, இத்துறையைச் சார்ந்தவர்களாலும் சக நீதிபதிகளாலும் மிக உயர்ந்த மரியாதையுடன் மதிக்கப்படுகிறார்,” என்று தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் அவருக்கு வழங்கிய பிரியாவிடை வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கப்பூரின் ஆரம்பகால நீதித்துறையின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிய திரு சூ, சமநிலையைக் கட்டிக்காத்து, தெளிவான சுருக்கமான தீர்ப்புகளை வழங்கினார் எனவும் திரு சுந்தரேஷ் மேனன் புகழாரம் சூட்டினார்.
பொதுச் சேவையில் தமக்கு ஆதரவு நல்கி, பல வகையிலும் உதவிய அனைவருக்கும் திரு சூ நன்றி தெரிவித்துக்கொண்டார்.

