‘ஒன் ஃபுல்லர்டன்’ல் அமைந்துள்ள மெர்லயன் சிலையை ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 2 வரை புகைப்படம் எடுக்க முடியாது.
பராமரிப்பு, சுத்தம்செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படவிருப்பதே அதற்குக் காரணம்.
“இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கும் வேளையில், மெர்லயன் சிலை மூடப்பட்டிருக்கும். அதனைப் புகைப்படம் எடுக்கமுடியாது,” என்று சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் தெரிவித்தது.
இந்தக் காலகட்டத்தில் அறிவிப்புப் பலகை ஒன்று அங்குப் போடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
மெர்லயன் மூடப்படுவது குறித்து பயணத்துறைக் கழகத்தின் பயண முகவர்கள், சுற்றுப்பயண வழிகாட்டிகள் உரிம முறையில், சுற்றுலா வழிகாட்டிகளுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படும்.
இருப்பினும், அந்த ஐந்து நாள்களின்போது, அருகில் அமைந்துள்ள குட்டி மெர்லயன் சிலையைப் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம்.
“இந்தக் காலகட்டத்தில் பராமரிப்புப் பணிகளாலும் தடுப்புவேலிகளாலும் அசௌகரியம் ஏற்படலாம் என்பதால் பொதுமக்களின் புரிதலை நாடுகிறோம்,” என்று சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் கூறியது.
மெர்லயன் சிலை முன்னதாக சென்ற ஆண்டு செப்டம்பர் 25 முதல் டிசம்பர் 13 வரை பழுதுபார்ப்புப் பணிகளுக்காக மூடப்படிருந்தது.
தொடர்புடைய செய்திகள்
மெர்லயன் சிலை 8.6 மீட்டர் உயரமுள்ளது; 70 டன் எடை கொண்டது. 1972ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் லீ குவான் யூ அதனை திறந்துவைத்தார்.