தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சொற்சிலம்பம் 2025: வாகை சூடியது யூனோயா தொடக்கக் கல்லூரி

3 mins read
05d1da98-41e7-4827-86ca-b30fbe80e864
வெற்றிக் கிண்ணத்துடன் யூனோயா தொடக்கக் கல்லூரி மாணவிகள். - படம்: அனுஷா செல்வமணி

‘இளையரிடையே சமூக சேவை மனப்பான்மை குறைந்து வருகிறது’ என்ற தலைப்பில் திறமையாக வாதம் செய்து ‘சொற்சிலம்பம் 2025’ இறுதிச்சுற்றில் வாகை சூடினர் யூனோயா தொடக்கக் கல்லூரி மாணவிகள்.

‘இளையரிடையே சமூக சேவை மனப்பான்மை குறைந்து வருகிறது’ என்ற தலைப்பில் திறமையாக வாதம் செய்து ‘சொற்சிலம்பம் 2025’ வெற்றியாளர் பட்டத்தைத் தட்டிச் சென்ற யூனோயா தொடக்கக் கல்லூரிக் குழு.
‘இளையரிடையே சமூக சேவை மனப்பான்மை குறைந்து வருகிறது’ என்ற தலைப்பில் திறமையாக வாதம் செய்து ‘சொற்சிலம்பம் 2025’ வெற்றியாளர் பட்டத்தைத் தட்டிச் சென்ற யூனோயா தொடக்கக் கல்லூரிக் குழு. - படம்: அனுஷா செல்வமணி

தொடக்கக் கல்லூரிகள், பலதுறைத் தொழிற்கல்லூரிகள், மில்லெனியா கல்வி நிலையம், ஐபி திட்டக் கழகங்கள், தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆகியவற்றின் மாணவர்களுக்காக நடத்தப்பட்ட தேசிய தமிழ்மொழி விவாதப் போட்டியின் இறுதிச்சுற்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 20) பிஜிபி அரங்கில் நடந்தது.

அவைத் தலைவராக இருந்து போட்டியை வழிநடத்தினார் வடிவழகன்.

அவைத் தலைவராக இருந்து போட்டியை வழிநடத்தினார் வடிவழகன்.
அவைத் தலைவராக இருந்து போட்டியை வழிநடத்தினார் வடிவழகன். - படம்: அனுஷா செல்வமணி

தொடக்கத்தில் பத்துப் பள்ளிகள் கலந்துகொண்ட இப்போட்டியில் ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரியும் யூனோயா தொடக்கக் கல்லூரியும் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றன.

சிறந்த பேச்சாளராக யூனோயா தொடக்கக் கல்லூரியின் நடராஜன் அனன்யா, 18, தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முதல் சுற்றில் தகுந்த சான்றுகளுடன் ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி விவாதத் தலைப்பை ஒட்டிப் பேச, பதிலுக்கு பல சமூகக் கருத்துகளுடன் யூனோயா தொடக்கக் கல்லூரி தலைப்பை வெட்டிப் பேச, போட்டி சூடுபிடித்தது.

இளையர்கள் பலர் தங்கள் வேலை வாய்ப்பு, குடும்பப் பொறுப்புகள், கல்வி போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தி வருவதால் சமூக சேவைக்கு நேரம் ஒதுக்குவது குறைந்து வருவதாக ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி பேச்சாளர்கள் வாதிட்டனர்.

அதை மறுக்கும் விதமாக, யூனோயா தொடக்கக் கல்லூரி மாணவர்கள், இளையர்கள் பலர் சமூக சேவையில் ஈடுபடுவதைப் புள்ளிவிவரங்கள் காட்டுவதாகவும், ஒருமுறை ரத்த தானம் செய்தாலும் அது பல உயிர்களுக்கு உதவுவது போலத்தான் என்பது போன்ற ஆணித்தரமான கருத்துகளைக் கூறியும் பார்வையாளர்களின் பாராட்டுகளைப் பெற்றனர்.

சிறப்பாகச் செயல்பட்ட இரு அணிகளுக்கும் சவால் விடுக்கும் வகையில் உடனடித் தலைப்பு ஒன்று தரப்பட்டது.

‘புதிய குடியேறிகள் வருகையால் சிங்கப்பூரின் வளர்ச்சி மேம்படுகிறது’ என்ற தலைப்பில் வெட்டிப் பேசியது ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி.

அவர்களுக்கு எதிராக யூனோயா தொடக்கக் கல்லூரி மாணவர்கள் தங்களின் எதிர்வாதங்களை முன்வைத்தனர்.

குடியேறிகள் சிங்கப்பூரில் பணியாற்றினாலும் அது சிங்கப்பூரின் வளர்ச்சிக்குச் சிறிதளவில் மட்டும்தான் உதவுவதாக விவாதித்த ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரிப் போட்டியாளர்கள் வாதிட, அது சிறிதாக இருந்தாலும் நாட்டின் வளர்ச்சிக்குக் கைகொடுப்பதைக் குறிப்பிட்டு பதிலடி தந்தனர்.

சிங்கப்பூரில் மூப்படையும் மக்கள்தொகை அதிகரித்து வருவதாலும், குழந்தைப் பிறப்பு விகிதம் குறைவாக இருப்பதாலும் குடியேறிகளின் பங்களிப்பு மிக முக்கியம் என்றனர் யூனோயா தொடக்கக் கல்லூரி பேச்சாளர்கள்.

இரண்டாவது சுற்றில் இரு அணியினரும் சிறப்பாக வாதிட்டனர்.

தமிழ்மொழி விழாவை முன்னிட்டு தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு, வளர்தமிழ் இயக்கம் ஆகியவற்றின் ஆதரவில் மக்கள் கழக நற்பணிப் பேரவை, வடமேற்கு வட்டார இந்தியர் நற்பணிச் செயற்குழுக்கள் ஆகியன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.

“எனக்குத் தமிழ்மொழிமீது மிகுந்த ஆர்வம். அதை வெளிப்படுத்த இப்போட்டியை ஒரு தளமாகப் பார்த்தேன். இவ்வாண்டு எங்களுக்கு ‘ஏ’ நிலை தேர்வுகள் நடைபெறவுள்ளன. இருந்தாலும், நேரத்தை நன்கு வகுத்து நாங்கள் போட்டிக்குப் பயிற்சி செய்தோம். இதன் மூலம் என் சொல்வளம் பெருகியுள்ளது,” என்று வெற்றி பெற்ற அணியைச் சேர்ந்த பேச்சாளர் குமார் சரண்யா, 17, கூறினார்.

“முதலில் மாணவர்கள் இப்போட்டியில் பங்குபெற விரும்புகிறார்களா என்பதைத்தான் நான் பார்ப்பேன். ஈடுபாடு இருக்கும்போது பல நிலைகளில் நான் பயிற்சியளித்தேன். குறிப்புகள் எழுதுவது, வாதத்தை முன்வைப்பது, ஏற்ற இறக்கத்தோடு எவ்வாறு பேசுவது போன்ற திறன்களைக் கற்றுத் தந்தேன். ஒவ்வொரு பயிற்சியின்போது நான் புதிய தலைப்புகளைத் தந்தேன்,” என்று யூனோயா தொடக்கக் கல்லூரித் தமிழாசிரியர் இளவரசி காந்தி சொன்னார்.

“வெற்றி பெறாவிடினும் எனக்கு மிக மகிழ்ச்சியாக உள்ளது. போட்டி மிகக் கடுமையாக இருந்தது. இதைப் பார்த்து மற்ற மாணவர்கள் போட்டிகளில் கலந்துகொள்ள ஆர்வம் காட்டுவர் என நாங்கள் நம்புகிறோம்,” என்றார் ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி அணியைச் சேர்ந்த பேச்சாளர் ஜோஷ்னா செந்தில்குமார், 17, தெரிவித்தார்.

இந்தப் போட்டி தம்மை வியப்படைய வைத்ததாகக் கூறினார் நடுவர்களில் ஒருவரான திருவாட்டி சரோஜினி பத்மநாதன்.

“எட்டு மாணவர்களும் மிகச் சிறப்பாகப் பேசியதால் ஒரு நடுவராக எனக்கு வெற்றிபெறும் அணியைத் தேர்ந்தெடுப்பது கடினமாக இருந்தது. விவாதம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்