கிளமெண்டி வட்டாரத்தில் உள்ள சமூக மண்டபம் ஒன்றில் நடைபெறும் உடற்பயிற்சி வகுப்புகளால் ஏற்படும் சத்தம் குறித்து குடியிருப்பாளர்கள் புகார் அளித்தனர். இதனை எதிர்கொள்ள போக்குவரத்து விளக்குகளைப் போன்ற ஒளி அடிப்படையிலான எச்சரிக்கை எழுப்பும் சத்தக் கண்காணிப்பு முறை அங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
சத்தத்தின் அளவு 83 டெசிபல்களுக்குமேல் உயரும்போது, சிவப்பு விளக்கு எரியும். அவ்வாறு அடிக்கடி சிவப்பு விளக்கை எரியச் செய்யும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவ்விடத்திற்கு முன்பதிவு செய்வதைத் தற்காலிகமாக நிறுத்தலாம்.
இந்தச் சத்தக் கண்காணிப்பு முறை பொதுவாகப் பச்சை நிற விளக்கை வெளிப்படுத்தும். சத்தம் அதிகமாகிக்கொண்டிருக்கிறது என்பதை எச்சரிக்க மஞ்சள் நிற விளக்கு எரியும். சிவப்பு விளக்கு எரிந்தால், அந்தச் சத்தம் அருகில் உள்ள குடியிருப்பாளர்களுக்கு இடையூறு என்பதை குறிக்கும்.
இந்த சத்தக் கண்காணிப்பு முறை கிளமெண்டி அவென்யூ 4, பிளாக் 306Aல் உள்ள சமூக மண்டபத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர்கள் பயன்படுத்தும் ஒலி பெருக்கிகளால் அதிக சத்தம் ஏற்பட்டதாக ஹாலந்து-புக்கிட் தீமா குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சிம் ஆன் புதன்கிழமையன்று (மார்ச் 11) தெரிவித்தார்.
2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இது நடைமுறைப்படுத்தப்பட்டதிலிருந்து சத்தம் தொடர்பான புகார்கள் இல்லை. விதிமுறைகளுக்கு உடன்படாத பயிற்றுவிப்பாளர் ஒருவர் தடை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சமூக மண்டபம் கட்டப்பட்ட ஓராண்டு காலமாகவே சத்தம் பெரும் பிரச்சினையாக இருந்ததாக அப்பகுதி குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
“அவர்கள் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தும்போது சத்தம் மிகவும் அதிகமாக இருக்கும். சன்னல்களை மூடினாலும் பயன் இருக்காது.” என்று 48 வயது திரு பெஞ்சமின் லியூ தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
இரவு நேரப் பணியை முடித்துவிட்டு வரும் தமக்கு, காலை 8 மணிக்கே தொடங்கும் இந்தச் சத்தம் தூக்கத்தைக் கெடுப்பதாக 44 வயது திருமதி கல்பனா பார்த்திபன் தெரிவித்தார்.
இந்தச் சத்தக் கண்காணிப்பு முறை மூலம் பெறப்படும் தரவுகள் ஹாலந்து-புக்கிட் பாஞ்சாங் நகர மன்றத்தால் கண்காணிக்கப்படும். குடியிருப்பாளர்கள் புகார் அளிக்கும் வரை காத்திருக்காமல், சத்தத்தைக் கண்காணிக்க இது உதவுகிறது. தேவைப்பட்டால் இத்திட்டம் தொகுதியின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று திருவாட்டி சிம் ஆன் கூறினார்.

