சிங்கப்பூரின் அடிப்படைப் பணவீக்க விகிதம் செப்டம்பர் மாதம், எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் சிறிய அளவில் ஏற்றம் கண்டது.
இரண்டாது மாதமாக பணவீக்கம் அதிகரித்ததாக சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக, தொழில் அமைச்சும் புதன்கிழமை (அக்டோபர் 23) தெரிவித்தன.
தனியார் போக்குவரத்துச் செலவுகளையும் தங்குமிடச் செலவுகளையும் கழித்த பின்னர், குடும்பங்களுக்கு ஆகும் செலவுகளை உள்ளடக்கியதே அடிப்படைப் பணவீக்கம்.
இதனை மூலாதாரப் பணவீக்கம் என்றும் அழைப்பது உண்டு.
ஆண்டு அடிப்படையில் இந்தப் பணவீக்கம் செப்டம்பரில் சிறிதாக அதிகரித்து 2.8 விழுக்காட்டைத் தொட்டது.
இது ஆகஸ்ட் மாதம் பதிவான 2.7 விழுக்காட்டைக் காட்டிலும் சின்னஞ்சிறிய ஏற்றம்.
மேலும், ஆகஸ்ட் மாதம்போலவே செப்டம்பரிலும் 2.7 விழுக்காடாக பணவீக்கம் தொடரும் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வில் பொருளியல் நிபுணர்கள் கணித்து இருந்தனர்.
அடிப்படைப் பணவீக்கம், ஏறத்தாழ இரண்டாண்டுகளுக்குப் பிறகு கடந்த ஜூலை மாதம் 2.5 விழுக்காடு என ஆகக் குறைவாகப் பதிவாகி இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
அதேநேரம், 2023 ஜனவரியில் பதிவான 5.5 விழுக்காடு என்னும் உச்சத்திற்குக் கீழேயே அது தொடர்ந்து இருந்து வருகிறது.
அடிப்படைப் பணவீக்க விகிதம் இவ்வாறு இருக்கையில், அதனை உள்ளடக்கிய ஒட்டுமொத்தப் பணவீக்கம் செப்டம்பரில் 2 விழுக்காடாக இருந்தது. ஆகஸ்ட் மாதம் பதிவான 2.2 விழுக்காடு என்பதைக் காட்டிலும் அது குறைவு.
தனியார் போக்குவரத்துச் செலவுகள் அதிக அளவில் குறைந்ததும் அதற்கு ஒரு காரணம். அவ்வாறு குறைந்தது, அடிப்படைப் பணவீக்க அதிகரிப்பை ஈடுசெய்ய உதவியது.
இருந்தபோதிலும், செப்டம்பர் மாத ஒட்டுமொத்தப் பணவீக்கம் 1.9 விழுக்காடாக இருக்கும் என்று ராய்ட்டர்ஸ் ஆய்வு கணித்ததைக் காட்டிலும் சற்று அதிகமாக இருந்தது.
சில்லறை விற்பனைப் பொருள்கள் மற்றும் இதர பொருள்களுக்கான செலவு செப்டம்பரில் 0.8 விழுக்காடாகப் பதிவானது. ஆகஸ்ட் மாத 0.4 விழுக்காடு என்பதைக் காட்டிலும் அது இருமடங்கு. ஆடைகள் மற்றும் காலணிகளின் விலைகள் ஆகஸ்ட் மாதம் சற்று தணிந்திருந்தன.
அதேநேரம், சேவைகளுக்கான பணவீக்கம் 3.3 விழுக்காடு என மாற்றமின்றித் தொடர்ந்தது. உணவுப் பணவீக்கம் சற்று குறைந்து 2.6 விழுக்காடு ஆனது.