டிரம்ப் உத்தரவால் தென்கொரிய - அமெரிக்கக் கூட்டுப் பயிற்சி குறைப்பு

டிரம்ப் உத்தரவால் தென்கொரிய - அமெரிக்கக் கூட்டுப் பயிற்சி குறைப்பு

1 mins read
785dfb4e-a968-427b-9941-b73864bf1391
இரு கொரியாக்களையும் பிரிக்கும் எல்லையிலுள்ள தென்கொரிய ராணுவ முகாமில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கவச வாகனங்கள். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

சோல்: தென்கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து நடத்தும் கூட்டு ராணுவப் பயிற்சியின் கால அளவு 11 நாள்களிலிருந்து ஐந்து நாள்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

தென்கொரியாவுடனான பயிற்சியைக் குறைத்துக்கொள்ளுமாறு கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 16) அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் உத்தரவிட்டிருந்தார்.

வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுடன் தாம் வைத்துள்ள நல்லுறவைச் சுட்டிக்காட்டிய அதிபர் டிரம்ப், வடகொரியாவின் சாத்தியமான தாக்குதலை எதிர்கொள்ள வடிவமைக்கப்பட்ட அந்தப் பயிற்சிகள் பொருத்தமற்றவை, பகைமையை வளர்ப்பவை என்று குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, தற்போது நடைபெற்று வரும் கூட்டுப் பயிற்சி வெள்ளிக்கிழமையுடன் (ஆகஸ்ட் 21) நிறைவுபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர்கள் குழுவும் பென்டகன் அதிகாரி ஒருவரும் அந்த அறிவிப்பை வெளியிட்டனர்.

திங்கட்கிழமை (ஆகஸ்ட் 17) தொடங்கிய அந்தப் பயிற்சி, முன்னதாகத் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 27ஆம் தேதி நிறைவுபெற வேண்டும்.

நடப்புப் பயிற்சி குறுகிய காலத்திற்குக் குறைக்கப்பட்ட அதேவேளை, பயிற்சியின் இரண்டாம் கட்டத்தை ரத்து செய்யும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாக தென் கொரியத் தற்காப்பு அமைச்சர் ஆன் கியு-பேக் கூறியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.

முதற்கட்டப் பயிற்சி தற்காப்பில் கவனம் செலுத்திய அதேவேளை இரண்டாம் கட்டப் பயிற்சி எதிர்த்தாக்குதலில் ஈடுபடுவது தொடர்பாக நடத்தப்பட இருந்தது எனவும் ஊடகங்கள் கூறின.

குறிப்புச் சொற்கள்
பயிற்சிதென்கொரியாஅமெரிக்கா