நாட்டிற்கே உரியதொரு நாகரிகத்தைப் பின்பற்றாமல் மாறிவரும் கலாசாரங்களைக் கொண்டிருக்கும் போக்கு, தென்கிழக்காசிய நாடுகள் வெளிப்படையாகவும் அனைவரையும் உள்ளடக்கியதாகவும் மீள்திறன்மிக்கதாகவும் இருப்பதற்கு உதவியிருப்பதாக அதிபர் தர்மன் சண்முகரத்னம் கூறியிருக்கிறார்.
இவர் டிசம்பர் 5ஆம் தேதியன்று கொள்கை ஆய்வுக் கழகத்தில் ‘நாகரிகங்களுடன் வாழ்தல்: தென்கிழக்காசியாவின் உள்ளூர் மற்றும் தேசிய கலாசாரங்களின் பிரதிபலிப்புகள்’ எனும் நிகழ்ச்சியில் பேசினார்.
வரலாற்றாசிரியர் வாங் குங்வுவின் புதிய நூலில் இடம்பெற்ற அம்சங்களைச் சுட்டிய திரு தர்மன், தென்கிழக்காசியா தனக்கெனச் சொந்தமாக ஒரு நாகரிகத்தை வகுத்துக்கொண்டதில்லை என்று குறிப்பிட்டார்.
அதன் உள்ளூர், தேசிய கலாசாரங்கள் வெளிப்புறத் தாக்கங்களால், குறிப்பாக, ‘இண்டிக்’, ‘சினிக்’ இஸ்லாமிய, ஐரோப்பிய கிறிஸ்தவம் ஆகிய நான்கு பழமைவாத நாகரிகங்களால் வடிவமைக்கப்பட்டவை என்றார் அவர்.
இந்த வட்டாரத்தில் உள்ள நாடுகள் அந்த நாகரிகங்களை முழுமையாகவோ தனித்தனியாகவோ கடைப்பிடிக்கவில்லை.
அவை வெவ்வேறு நாகரிகங்களிலிருந்து குறிப்பிட்ட சில அம்சங்களைத் தேர்ந்தெடுத்துத் தங்களின் சொந்த, மாறிவரும் தேசிய கலாசாரங்களுடன் ஒருங்கிணைத்ததாக திரு தர்மன் சொன்னார்.
இதனால் தென்கிழக்காசியா அதன் சொந்த, மாறிவரும் கலாசாரங்களைக் கட்டிக்காப்பதற்குக் குறிப்பிட்ட சில அம்சங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நவீனமயத்தைக் கொண்டுவர முடிந்தது.
இவ்வாறு உலகம் முழுவதிலும் உள்ள வெவ்வேறு நாகரிகங்களைத் தேர்ந்தெடுத்து ஒருங்கிணைக்கும் ஆற்றல், இந்த வட்டார நாடுகள் அவற்றின் சொந்த வழிகளில் மாறிவரும் உலகில் உள்ள பதற்றங்களைச் சமாளிக்க வகைசெய்யும் என்றார் திரு தர்மன்.