குறைந்த வருமான ஈட்டும் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு உதவும் விதமாக எஸ்பி குழுமம் 1 மில்லியன் வெள்ளி நன்கொடையாக வழங்கியுள்ளது.
சன்கேர் எஸ்ஜி (SunCare SG) என்னும் தொண்டூழிய அமைப்பிடம் அந்த நிதியை எஸ்பி குழுமம் வழங்கியது.
பொங்கோல் வாக் புளோக் 211Aல் சன்கேர் எஸ்ஜி அமைப்பு குழந்தைகள் தின நிகழ்ச்சியைச் சனிக்கிழமை (அக்டோபர் 4) நடத்தியது. அப்போது நன்கொடை குறித்து அறிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் துணைப் பிரதமர் கான் கிம் யோங்கும் தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் சுன் ஷுவெலிங்கும் கலந்துகொண்டனர்.
சன்கேர் எஸ்ஜி குழந்தைகளுக்கும் இளையர்களுக்கும் உதவி வருகிறது. தற்போது கிட்டத்தட்ட 200 பிள்ளைகள் சன்கேர் எஸ்ஜி தொண்டூழிய அமைப்புமூலம் பயன்பெற்று வருகின்றனர்.
குழந்தைகளுக்குக் கலை, விளையாட்டு, படிப்பு, பேச்சு, உணவு போன்ற பல அம்சங்களில் அமைப்பு உதவி வருகிறது. இது அனைத்தும் இலவசமாகச் செய்துகொடுக்கப்படுகிறது.
அமைப்பின் மூலம் பயன்பெற்ற பிள்ளைகள் தங்களுக்கு இதுபோன்ற உதவிகள் எப்படி உதவின என்பதை நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டனர்
சன்கேர் எஸ்ஜி ஆறு பேருள்ள குடும்பங்களுக்கும் பால் மாவு, அணையாடை (diaper) உள்ளிட்டவற்றையும் இலவசமாகக் கொடுத்து வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
வசதி குறைந்த குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் விதமாக வீடுகளைப் புதுப்பிப்பது உள்ளிட்ட உதவிகளையும் அமைப்பு செய்து வருகிறது.
எஸ்பி குழுமம் வழங்கிய 1 மில்லியன் வெள்ளி பல குடும்பங்களுக்கு உதவும் என்று சன்கேர் எஸ்ஜி தெரிவித்தது.
தற்போது கிடைத்த நிதி அடுத்த மூன்று ஆண்டுகளுக்குப் பயன்படுத்தப்படும். அது வீடுகளைப் புதுப்பிக்கவும் குழந்தைகளுக்குச் சத்தான உணவுகளை வழங்கவும் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.