மின்வாகனங்களுக்கான மின்னூட்டத்தை வழங்கும் எஸ்பி மொபிலிட்டி நிறுவனம் தனது போட்டி நிறுவனமான சார்ஜ்இக்கோவை (ChargEco) வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சிங்கப்பூர்ப் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையம் இரு நிறுவனங்கள் இணைவது தொடர்பாக மின்வாகன ஓட்டுநர்களிடமும் பொதுமக்களிடமும் கருத்துகளை கேட்டுவருகிறது.
இது தொடர்பாக ஆணையம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 2) அறிக்கை வெளியிட்டது.
“எஸ்பி மொபிலிட்டி நிறுவனமும் சார்ஜ்இக்கோ நிறுவனமும் இணைந்து விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தன. விற்பனை நடப்பது போட்டித்தன்மைக்கு எதிரான நடவடிக்கையா இல்லையா என்பதை ஆராய இது வழிவகுக்கும்,” என்று ஆணையம் குறிப்பிட்டது.
விற்பனையை ஆணையம் ஏற்றுக்கொண்டால் சார்ஜ்இக்கோ நிறுவனத்தின் மின்னூட்ட நிலையங்கள் உள்ள அனைத்து இடங்களிலும் எஸ்பி மொபிலிட்டி சேவை வழங்கும்.
வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்குகளின் வாகன நிறுத்துமிடங்கள், கடைத்தொகுதிகள், வர்த்தகக் கட்டடங்கள், தனியார் குடியிருப்புப் பகுதிகள் உள்ளிட்ட பல இடங்களில் சார்ஜ்இக்கோ நிறுவனத்தின் மின்னூட்ட நிலையங்கள் உள்ளன.
நிலப் போக்குவரத்து ஆணையத்தின் தகவல்படி, சிங்கப்பூரில் 1,311 இடங்களில் எஸ்பி மொபிலிட்டியின் மின்னூட்ட நிலையங்கள் உள்ளன. அதேபோல் 1,077 இடங்களில் சார்ஜ்இக்கோ நிறுவனத்தின் மின்னூட்ட நிலையங்கள் உள்ளன.
எஸ்பி குழுமத்தின்கீழ் எஸ்பி மொபிலிட்டி செயல்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
சார்ஜ்இக்கோ நிறுவனத்தை ‘ஸ்டிரைட்ஸ் மொபிலிட்டி’ மற்றும் ‘ஒய்டிஎல் பவர்செராயா’ இணைந்து உருவாக்கின. ஸ்டிரைட்ஸ் மொபிலிட்டி நிறுவனம் எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின்கீழ் செயல்படுகிறது.
விண்ணப்பத்தில் இரு நிறுவனங்கள் இணைவதால் போட்டித்தன்மைக்கு அச்சுறுத்தல் இருக்காது என்றும் சிங்கப்பூரில் மின்வாகனங்களுக்கு மின்னூட்டம் வழங்கும் நிறுவனங்கள் சில ஏற்கெனவே செயல்பட்டு வருகின்றன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

