ஸ்பெயினில் சிங்கப்பூர் பெண் கொலை

குற்றஞ்சாட்டப்பட்டவர் ‘மூர்க்கத்தனமாக’ இருந்தார்: முன்னாள் காதலி

2 mins read
8dd172f6-b2b1-4f54-a3f6-e8e7a188cfd1
சிங்கப்பூரர் ஆட்ரி ஃபாங்கை (வலது) ஸ்பெயினில் கொன்றதாக மிட்செல் ஓங் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. - படங்கள்: STRONGESTASIAN/இன்ஸ்டகிராம், FANG DIROU/ஃபேஸ்புக்

ஸ்பெயினில் சிங்கப்பூரரான ஆட்ரி ஃபாங்கை கொன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட மிட்செல் ஓங், கொலைச் சம்பவம் நடந்த சில நாள்கள் கழித்து, தம் உக்ரேனியக் காதலியைச் சந்தித்தார். தமது நிதிப் பிரச்சினையை தாம் விரைவில் தீர்க்கப் போவதாக அப்போது அவரிடம் ஓங் கூறினார்.

ஸ்பானிய நீதிமன்றம் ஒன்றில் அண்மையில் சாட்சியம் அளித்த அப்பெண், ஓங்கின் முழங்காலில் காயங்கள் இருந்ததைத் தாம் கண்டறிந்ததாகக் கூறியதை ஸ்பானிய ஊடகமான ‘லா வெர்டட்’ திங்கட்கிழமை (செப்டம்பர் 23) மேற்கோள் காட்டியது.

அடையாளப்படுத்தப்படாத அப்பெண், ஓங்கை மூர்க்கத்தனமான நபர் என வருணித்தார். ஓங்கின் காயங்கள் குறித்து அப்பெண் அவரிடம் விசாரிக்கவில்லை.

சில ஆண்டுகளாகக் காதலித்து வந்த ஓங்கும் அந்த உக்ரேனியப் பெண்ணும் பின்னர் பிரிந்துவிட்டதாக அந்த ஸ்பானிய ஊடகம் தெரிவித்தது. தமது நிதிப் பிரச்சினை குறித்து அவரிடம் ஓங், 43, முன்னதாகக் கூறியிருந்தார்.

ஓங்கின் வழக்கு விசாரணை தொடங்கிவிட்டதா, அவர் மீதான குற்றச்சாட்டுகள் யாவை என்பது குறித்து ஸ்பானிய ஊடகம் தகவல் வெளியிடவில்லை. ஓங், ஸ்பெயினில் வழக்கு விசாரணைக்கு முந்திய தடுப்புக்காவலில் இருந்ததாக முன்னதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஏப்ரல் 10ஆம் தேதி ஸ்பெயினின் அபனில்லா நகரில் லாரிகள் நிறுத்துமிடம் அருகே திருவாட்டி ஃபாங் 30 கத்திக்குத்துக் காயங்களுடன் மாண்டு கிடந்தார்.

அவரைக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் ஓங், ஏப்ரல் 16ஆம் தேதி முதல் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

திருவாட்டி ஃபாங் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து ஏறத்தாழ 150 கி.மீ. தூரத்தில் அவர் மாண்டு கிடந்தார். வேறொரு ஹோட்டலில் தங்கியிருந்த ஓங், ஹோட்டல் அறையில் கைதானார். திருவாட்டி ஃபாங்கின் கைப்பேசி உட்பட அவரது உடைமைகள் பலவும் அங்கு காணப்பட்டன.

திருவாட்டி ஃபாங்கிற்கு ஏற்பட்ட கத்திக்குத்துக் காயங்களும் அவரது தலையில் ஏற்பட்ட பலத்த காயமும் அவரது மரணத்துக்குக் காரணம் என முதற்கட்ட உடற்கூறாய்வில் கண்டறியப்பட்டது.

குறிப்புச் சொற்கள்