கோலாலம்பூரிலிருந்து சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த ‘ஸ்டார் கிஸ்னா’ பேருந்து, செப்டம்பர் 22ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் ஒரு பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
ஓட்டுநருக்கும் நான்கு பயணிகளுக்கும் காயம் ஏற்பட்டதுடன் 11 பயணிகள் பேருந்திலிருந்து வெளிவர முடியாமல் சிக்கிக்கொண்டனர்.
பேருந்தின் முன்சன்னலை வெட்டி எடுத்த பின்னரே அவர்களை மீட்க முடிந்தது.
விபத்தை அடுத்து பயணிகளில் ஒருவரான சேண்டி, இன்னொரு பயணியுடன் ஜோகூர் பாருவுக்கு கார்வழி அனுப்பப்பட்டார்.
“அந்த கார் மீட்புக் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டது என்று நினைக்கிறேன்,” என்றார் சேண்டி.
இதையடுத்து, விபத்து காரணமாகத் தமது பேருந்துப் பயணம் பாதியிலேயே ரத்தானதால் அதற்கான பணத்தைத் திருப்பித் தருமாறு பேருந்து நிறுவனத்திடம் வாட்ஸ்அப் மூலம் சேண்டி கோரியுள்ளார்.
சேண்டி எவ்வாறு ஜோகூர் பாருவைச் சென்றடைந்தார் என்று பதிலுக்கு நிறுவனம் அவரிடம் கேட்டது. தாம் கார்வழி சென்றதாக சேண்டி பதிலளித்தார்.
“காருக்கான கட்டணத்தை யார் செலுத்தியது என்று ஓட்டுநரிடம் கேட்டீர்களா? பேருந்து நிறுவனமா இலவசமா?” என்று மீண்டும் வினவியது பேருந்து நிறுவனம்.
தொடர்புடைய செய்திகள்
தாம் கட்டணம் குறித்து கேட்கவில்லை என்றும் ஓட்டுநர் கட்டணம் எதுவும் தங்களிடம் வசூலிக்கவில்லை என்றும் சேண்டி கூறினார்.
“நீங்கள் கட்டியதை விட 30 மடங்கு கட்டணத்தை அவர் எங்களிடம் வசூலித்துவிட்டார்,” என்று பதிலளித்தது பேருந்து நிறுவனம். சேண்டி தமது பேருந்துப் பயணச்சீட்டுக்குச் செலுத்திய கட்டணம் $19.
தாம் செலுத்திய கட்டணத்தைக் காட்டிலும் 30 மடங்கு தொகையை கார் ஓட்டுநரிடம் தர வேண்டியதாயிற்று எனப் பேருந்து நிறுவனம் கூறி தம்முடன் கோபித்துக்கொண்டதாக சேண்டி சுட்டினார்.
இதற்கிடையே, இன்னும் கொஞ்சம் மனிதாபிமானத்தோடு பேசி இருக்கலாமே என்ற குமுறல் அவருக்கு. அவருடன் வாட்ஸ்அப் உரையாடலை நிறுவனம் தொடராமல் அவரை ‘பிளாக்’ செய்ததாகவும் சேண்டி கூறியுள்ளார்.

