நாடாளுமன்றத்தில் கண்ணயர்ந்ததற்கு மன்னிப்புக் கேட்ட மன்ற நாயகர்

நாடாளுமன்றத்தில் கண்ணயர்ந்ததற்கு மன்னிப்புக் கேட்ட மன்ற நாயகர்

படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

18 Sep 2026 - 4:59 pm

2 mins read

சிங்கப்பூர் நாடாளுமன்ற நாயகர் சியா கியன் பெங் கடந்த வாரம் புதன்கிழமை (செப்டம்பர் 9) அவை நடவடிக்கைகளின்போது சில நொடிகள் கண்ணயர்ந்ததற்காக மன்னிப்புக் கேட்டுள்ளார்.

அவர் இது தொடர்பாக வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18) வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், அன்றைய தினம் தமது உடல்நிலை சரியில்லை என்றும் அதற்காக மருந்து எடுத்துக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், நடந்த செயலுக்கு அது ஒரு சாக்குப்போக்கு காரணமாக அமையாது என்று அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

“அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கக்கூடாது. அதற்கான முழுப்பொறுப்பையும் நான் ஏற்கிறேன்,” என்று திரு சியா தெரிவித்துள்ளார்.

சுகாதார அறிவியல் ஆணையத்தின்கீழ் சுகாதார ஒழுங்குமுறைப் பணிகளை ஒருங்கிணைப்பதற்குரிய மசோதா மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நிகழ்ந்தபோது திரு சியா சில நொடிகள் உறங்கிய நிலையில் இருந்தது காணப்பட்டது.

விவாதத்தில் பங்கேற்று ஹவ்காங் நாடாளுமன்ற உறுப்பினர் டென்னிஸ் டான் தமது உரையை நிறைவு செய்த பின்னர் அடுத்த உறுப்பினரை மன்ற நாயகர் பேச அழைத்திருக்க வேண்டும்.

ஆனால், நேரலை ஒளிபரப்பில் சுமார் 20 நொடிகள் நீடித்த ஓர் இடைவெளி பதிவாகியிருந்தது.

நாடாளுமன்றப் பணியாளர் ஒருவர் தட்டியெழுப்பிய பின்னரே சியா விழித்து எழுந்தார்.

பணியில் தொடர்ந்து செயல்படுவதற்குப் பதில் முன்னதாகவே தாம் இடைவேளை கோரியிருக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற நடவடிக்கைகள் நான்கு முதல் ஆறு மணி நேரம் வரை நடைபெற்ற பிறகே அதுபோன்ற இடைவேளைக்குத் தாம் கோருவது வழக்கம் என்றும் திரு சியா தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

காலை 10.30 மணிக்குத் தொடங்கிய அன்றைய கூட்டம் நான்கு மணி நேரம் நடைபெற்ற பிறகு அவர் கண்ணயர்ந்தது தெரியவந்தது.

கடந்த மூன்றாண்டுகளாக மன்ற நாயகராகப் பணியாற்றிய காலத்தில், தமது கடமைகளை மனசாட்சிப்படி நிறைவேற்றவும் அந்தப் பதவிக்குரிய கண்ணியத்தைக் காக்கவும் தாம் முயன்றதாக திரு சீ மேலும் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்
நாடாளுமன்றம்சபாநாயகர்சுகாதார அறிவியல் ஆணையம்