206 மாணவர்களுக்குச் சிறப்பு விருதுகள்

2 mins read
cb5785fc-cff0-4e87-a855-484774fe41a5
சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 26) நடைபெற்ற சிறப்பு விருதுகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசிய கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ. - படம்: பெரித்தா ஹரியான்

கடினமான, சிக்கலான சூழலைக் கடந்து செல்ல நற்பண்புகளையும் விழுமியங்களையும் வளர்த்துக்கொள்வது அவசியம் என்று கல்வி அமைச்சரும், சமூக சேவைகளின் ஒருங்கிணைப்புக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான டெஸ்மண்ட் லீ வலியுறுத்தியுள்ளார்.

அவைதான் தொழில்நுட்பங்களால் மாற்றமுடியாத அடித்தளத்தை ஏற்படுத்தும் என்றும், கொள்கைகளிலிருந்து மாறாமல் மாற்றங்களை எதிர்கொள்ள வழிவகுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 26) நடைபெற்ற சிறப்பு விருதுகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், ஆசிரியர்கள், சக மாணவர்கள், உற்றாரிடமிருந்து கிடைக்கும் ஆதரவையும், வழிகாட்டுதலையும் மதிக்க வேண்டும் என்றும் சொன்னார்.

“ஒவ்வொரு பின்னடைவையும் வெற்றிக்கான படியாகக் கருத வேண்டும்,” என்ற அவர், “வெற்றி என்பது தோல்வியைத் தவிர்ப்பதன்று, ஒவ்வொரு முயற்சியிலிருந்தும் கற்று மேலும் உயர்வது,” என்றும் சொன்னார்.

சிறப்பு விருதுகள் வழங்கும் விழா

இவ்வாண்டு 91 கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 195 மாணவர்களுக்கு 206 விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்விழாவில், பிரதமர் புத்தகப் பரிசு, கணிதம் மற்றும் அறிவியலுக்கான லீ குவான் யூ விருது, திறன்மேம்பாட்டை ஊக்குவிக்கும் லீ குவான் யூ விருது, தலைசிறந்த வழக்கநிலை மாணவர்களுக்கான லீ குவான் யூ விருது, சகலதுறை உன்னதத்திற்கான லீ குவான் யூ விருது, சிறப்புச் சாதனைக்கான லீ சியன் லூங் விருது, தலைசிறந்த சகலதுறைச் சாதனையாளருக்கான லீ சியன் லூங் விருது, இரு கலாசாரப் படிப்பில் தலைசிறந்த மாணவர்களுக்கான லீ சியன் லூங் விருது, சுல்தான் ஹாஜி ஓமார் சைஃபுதின் புத்தகப் பரிசு, முன்மாதிரி மாணவருக்கான லீ குவான் யூ விருது, லீ சியன் லூங் இருவழி மின்னிலக்க ஊடக அறிவார்ந்த தேச விருது ஆகிய 11 விருதுகள் வழங்கப்பட்டன.

ஐந்து மாணவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றனர்.

குறிப்புச் சொற்கள்