பெண் குழந்தைகள் இருவருக்குப்பின் பிறந்த மகனான ஆறு மாதக் குழந்தை அம்மர் அர்சாத்துடன் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்றனர் முஹம்மது அர்சாத், அனிசா சாஜஹான் தம்பதியர்.
இவர்களின் மூத்த மகளான ஆறு வயது அல்யானா, இந்த ஆண்டு முதன்முறையாக நோன்பு நோற்றுப் பெருநாளைக் கொண்டாடுகிறார். இரண்டாவது பிள்ளையான ஒன்றரை வயது அய்லாவுக்கும் குதூகலமே.
ரமலான் மாதத்தின்போது அதிகாலையில் எழுந்து நோன்புக்கு முந்தைய ‘சாஹர்’ காலை உணவைக் குடும்பத்திற்காகத் தயாரிப்பது அனிசா சாஜஹானின் வழக்கம்.
குழந்தை அம்மரின் உறக்கத்திற்கு ஊறு செய்யாமலிருக்க, பல்துலக்கிகளையும் குளியல் பொருள்களையும் தங்கள் அறையிலிருந்து வெளியே எடுத்துவைக்க வேண்டியிருந்ததாக அனிசா, 32, கூறினார்.
“நான் பேச்சுத்திறன், நாடக ஆசிரியராகவும் ஊடகத்தில் பகுதிநேர ஊழியராகவும் பணியாற்றுகிறேன். காலையில் வீட்டிலிருந்து வேலைசெய்வேன். நோன்புக் காலத்திலும் அந்த நாளுக்கான உணவைக் காலை நேரத்தில் சமைத்துவிடுவேன். பிற்பகல் அலுவலகம் செல்வேன். மாலை ஆறு மணியளவில் வீடு திரும்பி எல்லோருக்குமான உணவைப் பரிமாறுவேன்,” என்று அவர் கூறினார்.
இரண்டு நாள் பகலில் வேலை, இரண்டு நாள் இரவில் வேலை, பிறகு ஓய்வு நாள் என்ற சுழற்சி முறையில் பணியாற்றும் அர்சாத், தம் மனைவியுடன் பிள்ளைகளைப் பராமரிக்கிறார். அவர்களுக்குத் துணையாக பணிப்பெண் இருந்தாலும், இந்த இளம் பெற்றோர்களுக்கு அலைச்சல் அதிகம்.
பாலர் பள்ளியில் பயிலும் அல்யானா, இயன்ற அளவுக்கு நோன்பிருப்பார். நோன்பிருக்கும் கட்டாயம் இல்லை என்றாலும் புலனடக்கத்திற்கான பயிற்சியை இளமையில் கற்பது சிறப்பானது என்கின்றனர் பெற்றோர்கள்.
மூன்றாவது குழந்தை குறித்துக் கூறும்போது, “எனக்கு உடன்பிறந்தோர் இருவர். குடும்பம் பெரிதாக இருக்கவேண்டும் என்பது என் ஆசை. அத்துடன், ஆண் குழந்தை பெற்றுக்கொள்ள என் மனைவி விரும்பினார்,” என்று 32 வயது அர்சாத் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
சிறு வயதிலிருந்து ரமலான் மாதத்தின்போது ஒவ்வொரு நாளும் பள்ளிவாசல் செல்லும் வழக்கத்தைப் பின்பற்றி வந்த அர்சாத், இந்த ஆண்டு ரமலான் மாதத்தின்போது அதிகம் செல்ல இயலவில்லை.
“வேறுவிதமாக அன்புசெலுத்த இறைவன் என்னைப் பணிப்பதாக எண்ணுகிறேன்,” என்றார் அவர்.
இறையன்புக்கான வழக்கங்களாக இருந்தாலும் அவற்றைப் பிள்ளைகளுக்கு அன்புடன் கற்றுத்தரவேண்டும் என்பது இந்தத் தந்தையின் நிலைப்பாடு.
“ரமலான் மாதத்தின்போது எங்களது குடும்பப் பிணைப்பு வளர்ந்தது. சேர்ந்து உணவருந்துவது, கூட்டாகத் தொழுகை மேற்கொள்வது எனக் குடும்பமாகச் செய்கிறோம். இதைக் காணும் பிள்ளைகள் பெரியவர்கள் ஆன பிறகும் இந்த வழமைகளைப் பின்பற்றுவார்கள் என்பது எங்கள் நம்பிக்கை,” என்று அர்சாத் கூறினார்.