இந்த ஆண்டு, சிங்கப்பூரில் இரண்டாவது நீதி சாசனம் அறிமுகப்படுத்தப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கிறது.
அது சிங்கப்பூரின் நீதித்துறை, நீதி முறைமைக்கான அடித்தளத்தை அமைத்தது.
இதை நினைவுகூரும் வகையில் பொதுமக்கள் சிங்கப்பூரின் சட்ட வரலாறு, சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதில் நீதிமன்றங்களின் பங்கு ஆகியவை பற்றி அறிந்துகொள்ளும் விதமாகச் சிங்கப்பூர் சட்டக்கழகம் கண்காட்சி ஒன்றைத் தொகுத்துள்ளது. இந்தக் கண்காட்சி ஓராண்டுக்கு இடம்பெறும்.
சமூக, பொருளியல், தொழில்நுட்ப மாற்றங்களுக்கு மத்தியில், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதில் சிங்கப்பூர் நீதித்துறையின் பங்கு, கடந்த இருநூறாண்டுகளில் அது அடைந்த பரிணாம வளர்ச்சி ஆகியவற்றை இந்தக் கண்காட்சி வரிசைப்படுத்துகிறது.
இது சிங்கப்பூரின் சட்டத்தின் மூன்று முக்கிய அம்சங்களை முன்னிலைப்படுத்தும்.
செழுமையான பாரம்பரியம், முற்போக்கான சட்ட, நீதித்துறை அமைப்பு, சிங்கப்பூர் மக்களின் வாழ்க்கையில் அது ஏற்படுத்திய தாக்கம் ஆகியவை அந்த அம்சங்களாகும்.
இந்தக் கண்காட்சி உச்ச நீதிமன்றத்தில் இடம்பெறும். கண்காட்சி குறித்த கூடுதல் தகவல்களுக்கு https://sal.org.sg/legal-heritage/the-charter-and-the-courts-200-years-of-the-rule-of-law-in-singapore/ எனும் இணையப்பக்கத்தை நாடலாம்.

