வழிபாட்டுத் தலங்களில் உலகக் கிண்ணக் காற்பந்து சிறப்பு நேரடி ஒளிபரப்பு

வழிபாட்டுத் தலங்களில் உலகக் கிண்ணக் காற்பந்து சிறப்பு நேரடி ஒளிபரப்பு

2 mins read
6feacfca-798f-417f-a906-430db9bad811
ஜாலான் பெசார் சமூக மன்றத்தில் ஜூன் 15அன்று ஒளிபரப்பான ஜப்பான்,. நெதர்லாந்து போட்டியை பார்வையிட்டு மகிழ்ந்த பொதுமக்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டித் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், சிங்கப்பூரிலுள்ள பல மசூதிகள், ஒரு தேவாலயம் என ஜூலை 19, 20 ஆகிய இரண்டு தேதிகளில் நள்ளிரவுக்குப் பிறகு நடக்கும் காற்பந்து ஆட்டங்களை நேரடியாக ஒளிபரப்பு செய்ய வழிபாட்டுத் தளங்கள் ஏற்பாடு செய்துள்ளன.

மூன்றாம் நிலைக்கான போட்டி, இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் ஜூலை 19ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு நடக்கவுள்ளது.

இறுதி ஆட்டம் ஜூலை 20ஆம் தேதி அதிகாலை 3.00 மணிக்கு அர்ஜென்டினாவுக்கும் ஸ்பெயின் குழுவுக்கும் இடையே நடக்கும். அவ்விரு ஆட்டங்களையும் இங்கு பொதுமக்கள் பார்த்து ரசிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஜூ சியாட்டில் உள்ள மஸ்ஜித் காலித், அட்மிரால்டியில் உள்ள அன்-நூர் மசூதி ஆகியவை இளைஞர்களுக்காகப் பிரார்த்தனைகள், இஸ்லாமிய சமய வகுப்புகள் போன்று ஆட்டத்திற்கு முன்பும் பிறகும் காற்பந்து விளையாட்டுகளுடன் கூடிய சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளன.

கம்போங் கிளாமின் அடையாளமான தேசிய நினைவுச் சின்னமாகிய சுல்தான் மசூதியும் இறுதிப்போட்டிக்கான சிறப்பு ஒளிபரப்பைத் தொழுகையுடன் இணைத்து நடத்தவுள்ளது.

அதேபோல், சிராங்கூனில் உள்ள ‘சர்ச் ஆஃப் தி இம்மாக்குலேட் ஹார்ட் ஆஃப் மேரி’ தேவாலயம், முதன்முறையாக உலகக் கிண்ணக் காற்பந்து இறுதிப்போட்டி கொண்டாட்டத்தை ஒருங்கிணைத்துள்ளது.

அனைவரும் பகிரக்கூடிய பல சுவையான உணவுகளுக்கு அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த தேவாலயத்தின் அருட் தந்தை ரெவரெண்ட் திமோதி இயோ தீவிர காற்பந்து ரசிகர் ஆதலால் அவரது ஆலோசனையின்படி இந்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

மதுபானக் கூடங்களைத் தவிர்த்து, குடும்பங்கள் பாதுகாப்பான சூழலில் நட்புறவை வளர்க்க இந்த முயற்சி ஒரு நல்வாய்ப்பாக அமையும் எனத் தேவாலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஜூன் 11 ஆம் தேதி தொடங்கி, வர்த்தகத் தளங்களில் நேரடியாக ஒளிபரப்பான உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகள், சமூக ஒருமைப்பாட்டை வளர்க்க ஆன்மிகத் தலங்களிலும் விரிவடைந்துள்ளது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

குறிப்புச் சொற்கள்
நேரடி ஒளிபரப்புதேவாலயம்பள்ளிவாசல்வர்த்தகம்கம்போங் கிளாம்சிராங்கூன்காற்பந்து

தொடர்புடைய செய்திகள்