ஒவ்வோர் ஆண்டும் சிங்கப்பூரின் தேசிய தின அணிவகுப்பு சிங்கப்பூரர்களின் நாட்டுப் பற்றை வெளிக்கொணரும் களமாக அமைந்து வருகிறது.
இந்த ஆண்டு தேசிய தினத்தை முன்னிட்டுச் சிங்கப்பூரர்கள் பலரும் தங்கள் நாட்டுப் பற்றைச் சமூக ஊடகங்களில் வெவ்வேறு வடிவில் பதிவிட்டுள்ளனர்.
சமிந்தராஜ் குமாரின் ‘ஒன்றாக முன்னேறுவோம்’ பாடல்
பல் அறுவை சிகிச்சை மருத்துவரான சமிந்தராஜ் குமார், தாம் இசை அமைத்த ‘ஒன்றாக முன்னேறுவோம்’ என்ற தேசிய தினப் பாடலைச் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.
பாடலில் இடம்பெறும் இசை கேட்போர் மனத்தில் தனி இடம் பிடிக்கும் என்றால் அது மிகையில்லை. சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் வண்ணம், ‘தோள் கொடுத்து நாம் எழுவோம், ஒரே தீபத்தில் ஒளிர்வோம்’ என்ற அவரது பாடல் வரி அமைந்துள்ளது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஊழியர்களின் சிறப்புக் காணொளி
உலகை எத்தனைமுறை வலம் வந்தாலும், தங்கள் உள்ளங்கள் தாய்நாடான சிங்கப்பூரிலேயே இருக்கும் என்கின்றனர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானச் சிப்பந்திகள்.
அதனை வெளிப்படுத்தும் வகையில், சிங்கப்பூரின் 61வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்புக் காணொளி ஒன்றைத் தங்கள் சமூக ஊடகப் பக்கத்தில் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
‘கோயிங் பியாண்ட் இன் ஹார்மனி’ (Going Beyond in Harmony) என்ற அந்த தேசிய தினக் காணொளியில் விமானச் சிப்பந்திகள் நடனம் ஆடி, பாடல் பாடி, இசைக் கருவிகளையும் வாசித்துள்ளனர்.
தலைமைச் சிப்பந்தி ஃபௌஸான் ‘முன்னேறு வாலிபா’ என்ற தமிழ்ப் பாடலைப் பாட அதற்கு இந்தியச் சிப்பந்தி ஒருவர் நடனமாடுகிறார்.
அவ்வாறு அவர்கள் வெவ்வேறு இனங்களையும் மொழிகளையும் பிரதிநிதிக்கும் பாடல்களை ஆடியும் பாடியும் அக்காணொளியைப் படைத்தது சிங்கப்பூரின் பன்முகக் கலாசாரத்தைப் பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது.
தமிழ் சாகாவின் ‘சிங்கப்பூரின் பெருமை’ பாடல்
‘தமிழ் சாகா’ என்ற தமிழ்ச் சமூக ஊடகப் பக்கம் ‘சிங்கப்பூரின் பெருமை’ என்ற துடிப்பான பாடலைக் காணொளி வடிவில் வெளியிட்டுள்ளது. அந்தக் காணொளியில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு சமூகங்களின் தேசிய தினக் கொண்டாட்டங்களைக் காட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
பழங்காலத்துச் சமூக இசைப் படைப்பு வடிவில், டேவிட் பியின் ‘சிங்கப்பூர் டவுன்’ பாடலையும் ‘தபாவு’ பாடலையும் இணைத்து ‘த ஷியோக் சிஸ்டர்ஸ்’ இசைக் குழுவும் பாடகர் ரிக் லியுவும் படைத்துள்ளனர்.
அந்த இசைப் படைப்பு, தேசிய தினக் கொண்டாட்டங்களுக்கு மேலும் சிறப்பூட்டும் வண்ணம் திகழ்கிறது.


