ஸ்ரீ லயன் சித்தி விநாயகர் கோயில் நூற்றாண்டை எட்டியுள்ளதால், அதனைக் கொண்டாட சிறப்பு வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்தக் கொண்டாட்டங்கள் ஜூன் மாதம் 13, 14 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளன.
முக்கிய வழிபாடாக இடம்பெறும் 108 கலசாபிஷேகம், வெள்ளிக்கிழமை (ஜூன் 13) மாலை 4 மணிக்குத் தொடங்கி 8 மணிவரை நடைபெறவுள்ளது.
தொடர்ந்து சங்கடஹர சதுர்த்தி விழாவுடன் இணைந்து நடைபெறும் வழிபாடுகள் சனிக்கிழமை (ஜூன் 14) காலை 5 மணிக்குத் தொடங்கி இரவு 7 மணிவரை நடைபெறவுள்ளது. மேலும், விநாயகர் புறப்பாடும் அன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கோயில் நிர்வாகம் கூறியுள்ளது.
கோயிலுக்குப் பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவது காண்பதற்கு மிக்க மகிழ்ச்சியாக இருப்பதாக அக்கோவிலின் தலைவர் கார்பார் சுப்பிரமணியம் காசி கூறினார். கடந்த 1978ஆம் ஆண்டுமுதல் தொடர்ந்து அக்கோயிலுடன் பயணித்து வரும் அவர், இவ்வாண்டு பிப்ரவரி மாதம் தலைவராகப் பொறுப்பேற்றார்.
நூற்றாண்டு விழாவான இவ்வாண்டு தலைவராகப் பொறுப்பேற்றுள்ளது பெருமையாக உள்ளது என்றும் 17 பேர் கொண்ட நிர்வாகக் குழுவுடன் இணைந்து இயன்றவரை இறை, சமூகத் தொண்டுகளைச் செய்வதே நோக்கம் என்றும் திரு காசி தெரிவித்தார்.