தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நான்கு தேவிகள் சங்கமித்த தேர்த் திருவிழா

4 mins read
116e2c46-996b-429f-8390-8273267b4013
நான்கு தேவிகள் சங்கமித்த தேர்த் திருவிழா.  - படம்: த. கவி

சிங்கப்பூரில் இதுவரை காணாத அளவில் நான்கு கோவில்களின் தேவிகள் சங்கமித்த ரத உற்சவம் அண்மையில் இடம்பெற்றது.

இந்து சமயத்தின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றாக விளங்கும் நவாக்‌ஷரி திருவிழா எட்டு நாள்கள் நீடிக்கும்.

திருவிழாவின் நிறைவாக நவாக்‌ஷரி லட்ச ஜப மகா யாகத்தினை முன்னிட்டு தோ பாயோ ஸ்ரீ வைராவிமட காளியம்மனுக்குச் சிறப்பு ரத உற்சவம் நடைபெற்றது.

சனிக்கிழமை தோ பாயோ ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோவிலில் இந்த விழா இடம்பெற்றது.
சனிக்கிழமை தோ பாயோ ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோவிலில் இந்த விழா இடம்பெற்றது. - படம்: த. கவி

சனிக்கிழமை (மார்ச் 22) தோ பாயோ ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோவிலில் விழா இடம்பெற்றது.

தோ பாயோ ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோவிலில் முதன்மை மூர்த்தியாக இருக்கும் தேவியின் சிறப்பு விருந்தினர்களாக மூன்று முக்கியக் கோவில்களின் தெய்வங்கள் வரவேற்கப்பட்டன.

தோ பாயோ ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோவிலில் முதன்மை மூர்த்தியாக இருக்கும் தேவிக்கு சிறப்பு விருந்தினர்களாக மூன்று முக்கியக் கோவில்களின் தெய்வங்கள் வரவேற்கப்பட்டன. 
தோ பாயோ ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோவிலில் முதன்மை மூர்த்தியாக இருக்கும் தேவிக்கு சிறப்பு விருந்தினர்களாக மூன்று முக்கியக் கோவில்களின் தெய்வங்கள் வரவேற்கப்பட்டன.  - படம்: த. கவி

சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோவில், சிராங்கூன் சாலை ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவில், ஸ்ரீ வடபத்திர காளியம்மன் கோவில்களின் மூன்று தேவிகளும் தத்தம் ஆலயத்திலிருந்து வெள்ளி ரதத்தில் ஊர்வலமாக வந்து ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோவிலில் அருள்புரிந்தனர்.

கிட்டத்தட்ட பத்தாண்டுகள் கழித்து மீண்டும் இந்த ரத உற்சவம் நடைபெறுகிறது.

இதற்குமுன் கேலாங் ஈஸ்ட் ஸ்ரீ சிவன் கோவில், ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில் ரத ஊர்வலத்தில் பங்கேற்றுள்ளன.

பக்தர்களிடம் ஆன்மிக உணர்வைப் பெருக்குவதுடன் இந்து சமயத்தின் செழுமையையும் பாரம்பரியத்தின் முக்கியத்துவத்தையும் இந்தத் திருவிழா வலியுறுத்துகிறது.

“நவாக்‌ஷரி திருவிழாவின் கடைசி நாளில் சிங்கப்பூரின் இதர அம்மன் கோவில்களிலிருந்து தேவிகளை வரவழைத்தது திருவிழாவை அடுத்த நிலைக்குக் கொண்டுசென்றது. முதன்முறையாக இந்தக் கோவில்களுடன் நாங்கள் கைகோத்தது மிகச் சிறப்பாக இருந்தது,” என்றார் தோ பாயோ ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோவிலின் தலைவர் சந்திரசேகர் பழனிசாமி, 61.

ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோவிலில் பெரும்பாலும் இளைய தொண்டூழியர்களே முன்னேற்பாடுகளைச் செய்தனர். வழக்கமாக நவாக்‌ஷரி யாகம் ஏழு நாள்கள் நடைபெற்ற பின்னர் வைராவிமட காளியம்மன் கோவிலில் இறுதி நாள் பூசையுடன் அது நிறைவு பெறும்.

இம்முறை இளைய தொண்டூழியர்கள் புதுமையாகச் செய்ய வேண்டும் என்பதற்காக இதர கோவில்களுடன் கைகோத்தனர்.

“கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு முன்னர் ரத ஊர்வலத்திற்கு ஆயத்தமாகத் தொடங்கினோம். எங்கள் கோவிலிருந்து இதர கோவில்களை சேர்ந்த தேவிகளைக் காண பக்தர்களுக்கு அரிய வாய்ப்பும் கிடைத்தது,” என்று ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோவில் உறுப்பினர் குழுவில் இடம்பெற்றுள்ள மனோஜ் குமார், 31, குறிப்பிட்டார்.

சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோவிலிருந்து மாலை ஆறு மணிக்குள் ரதம் புறப்பட்டது. அதற்கு முன்னர் மாரியம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்று ரதம் அலங்கரிக்கப்பட்டது.

சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோவிலிலிருந்து மாலை ஆறு மணிக்குள் ரதம் புறப்பட்டது.
சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோவிலிலிருந்து மாலை ஆறு மணிக்குள் ரதம் புறப்பட்டது. - படம்: த. கவி

சவுத் பிரிட்ஜ் ரோட்டிலிருந்து புறப்பட்ட ரதம் லிட்டில் இந்தியாவில் உள்ள ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவிலை வந்தடைந்தது.

சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் அலங்கரிக்கப்படும் வெள்ளி ரதம்.
சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் அலங்கரிக்கப்படும் வெள்ளி ரதம். - படம்: த. கவி

ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவிலில் ஏற்கனவே அலங்கரிக்கப்பட்ட வெள்ளி ரதம் சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோவிலிருந்து புறப்பட்ட ரதத்தைப் பின்தொடர்ந்து அவ்விரு ரதங்களும் ஸ்ரீ வடபத்திர காளியம்மன் கோவிலை நோக்கிச் சென்றன.

ஸ்ரீ வடபத்திர காளியம்மன் கோவிலைச் சென்றடைந்ததும் ஸ்ரீ மாரியம்மன் கோவிலிலிருந்து புறப்பட்ட ரதம் அவ்விரு ரதங்களையும் வழிநடத்தி மூன்று ரதங்களும் தோ பாயோ ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோவிலை நோக்கிச் சென்றன.

இரவு 7.30 மணிக்குள் மூன்று ரதங்களும் தோ பாயோவை வந்தடைந்தன. பருவமழை காலமாக இருந்தபோதிலும் சனிக்கிழமை மழை பெய்யாமல் ரத உற்சவத்துக்கு ஒத்துழைத்தது.

தோ பாயோ ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோவிலில் நான்கு தேவிகள் சங்கமித்த தருணத்தைக் காண கிட்டத்தட்ட 1,000 பக்தர்கள் திரண்டனர்.

“ஸ்ரீ மாரியம்மன் தீமிதித் திருவிழாவை தவிர்த்து வேறு எந்த நிகழ்ச்சிக்கும் வெளியில் வரமாட்டார். அந்த வகையில் நவாக்‌ஷரி திருவிழாவுக்கு நான்கு தேவிகளும் இணைவது எங்களுக்குப் பெருமகிழ்ச்சியை அளிக்கிறது. ஒரு கோவிலுக்கு குடமுழுக்கு செய்வதுபோல நவாக்‌ஷரி திருவிழா அந்தக் கோவிலுக்கு புத்துயிர் அளிக்கும் ஒரு சிறப்பான திருவிழாவாகக் கருதுகிறேன்,” என்றார் சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோவில் உறுப்பினர் குழுவில் இடம்பெற்றுள்ள திரு எம். ரவிக்குமார், 58.

“ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோவிலுக்கு மிக நெருக்கமான நிகழ்ச்சியாக இந்த நவாக்‌ஷரி திருவிழா உள்ளது. ரத ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்வது எளிதன்று. இரு வாரங்களுக்கு முன்னரே ஊர்வலத்திற்கு அனுமதி பெற வேண்டும். ரதத்தை அலங்கரித்து அதை மெருகூட்ட ஒவ்வொரு கோவிலிலும் தொண்டூழியர்கள் கடுமையாக உழைத்தனர்,” என்று ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவில் தலைவர் ராஜாகாந்த் தெரிவித்தார்.

“எங்கள் கோவிலிலிருந்து கிட்டத்தட்ட 10 தொண்டூழியர்கள் இதில் முழுமூச்சாக ஈடுபட்டனர். ரத ஊர்வலத்திற்கான ஏற்பாடுகள் பலவற்றையும் ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோவில் நிர்வாகம் கவனித்துக்கொண்டது. எதிர்காலத்தில் இன்னும் பல நிகழ்ச்சிகளுக்கு இவர்களுடன் கைகோக்க ஆவலுடன் உள்ளோம்,” என்று ஸ்ரீ வடபத்திர காளியம்மன் கோவில் உறுப்பினர் குழுச் செயலாளர் சர்வேஷ், 30, சொன்னார்.

தோ பாயோ குடியிருப்பாளர்களுக்கு அப்பாற்பட்டு இதர இடங்களிலிருந்தும் பக்தர்கள் பலர் திருவிழாவில் கலந்துகொண்டனர். மார்சிலிங் வட்டாரத்திலிருந்து வந்திருந்த திருவாட்டி லீலா, 60, முதன்முறையாக இதில் பங்கேற்றதாகவும் நான்கு தேவிகள் இணைந்த தருணத்தைப் பார்த்த போது தனக்கு மெய்சிலிர்த்ததாகவும் சொன்னார்.

தோ பாயோ வட்டாரக் குடியிருப்பாளர்களுடன் வேறு பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் பலர் திருவிழாவில் கலந்துகொண்டனர்.
தோ பாயோ வட்டாரக் குடியிருப்பாளர்களுடன் வேறு பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் பலர் திருவிழாவில் கலந்துகொண்டனர். - படம்: த. கவி
குறிப்புச் சொற்கள்