கனரக வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவியைப் பொருத்தவேண்டும் என்ற விதிமுறை பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த ஜூலை மாதம் ஒன்றாம், இரண்டாம் தேதிகளில் சோதனை நடத்தப்பட்டது.
அச்சோதனைகளில் போக்குவரத்துக் காவல்துறை இரண்டு லாரிகளை இழுத்துச் சென்றது.
சோதனை
குறிப்பிட்ட சில நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டது. 2018ஆம் அண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதிக்கு முன்பு பதிவுசெய்யப்பட்ட லாரிகளை இயக்கும் நிறுவனங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
பொருள்களை ஏற்றிய பிறகு அதிகபட்ச எடை 3,501லிருந்து 5,000 கிலோகிராமுக்கு உட்பட்ட லாரிகளுக்கு இது பொருந்தும் என்று காவல்துறை வெள்ளிக்கிழமை (ஜூலை 10) அறிக்கை மூலம் தெரிவித்தது.
அந்த லாரிகளில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளைப் பொருத்த ஜூலை மாதம் ஒன்றாம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டிருந்தது. அவற்றில் கிட்டத்தட்ட 1.1 விழுக்காட்டு லாரிகளில் அந்தத் தேதிக்குள் கருவி பொருத்தப்பட்டதாகப் பதிவுசெய்யப்படவில்லை.
2018ஆம் ஆண்டுக்கு முன்பு பதிவுசெய்யப்பட்ட, 5,001லிருந்து 12,000 கிலோகிராம் வரையிலான அதிகபட்சக் கொள்ளளவைக் கொண்டிருக்கும் லாரிகளுக்கு இவ்வாண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டிருந்தது.
அந்தந்த கெடுவுக்குள் வேகக் கட்டுப்பாட்டுக் கருவியைப் பொருத்துமாறு குறுந்தகவல்கள், மின்னஞ்சல்கள், கடிதங்கள், நேரடித் தொடர்புகள் ஆகிய வழிகளின் மூலம் போக்குவரத்துக் காவல்துறை, லாரி உரிமையாளர்களைத் தொடர்புகொண்டதாகக் காவல்துறை வெள்ளிக்கிழமை குறிப்பிட்டது.
தண்டனை
வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தாவிட்டால் உரிமையாளர்களுக்கு 1,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது மூன்று மாதங்கள் வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்படாத லாரிகளை இயக்கும் நிறுவனங்கள் அனுமதி வழங்கப்பட்ட சோதனை நிலையங்களில் அவற்றை விட்டுச் செல்லவேண்டும் என்று காவல்துறை சொன்னது. சோதனையின்போது விதிமுறையைப் பூர்த்திசெய்யாத நிறுவனங்களும் உரிமையாளர்களும் அடையாளம் காணப்படும் என்றும் அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கெடுவுக்குப் பிறகு வேகக் கட்டுப்பாட்டுக் கருவியைப் பொருத்துவோர்மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
விதிமுறைகளைப் பூர்த்திசெய்யாத லாரிகளை ஓட்டுவது சட்டவிரோதமானது. அந்த லாரிகளுக்கான சாலை வரியைப் புதுப்பிக்க முடியாது. காப்புறுதித் திட்டங்களுக்குக்கீழ் அவற்றுக்கு உறுதியளிக்கப்படும் தொகையும் குறைக்கப்படலாம்.

