சாலைகளில் வாகனங்கள் வேக வரம்பை மீறிய சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டின் (2025) முதற்பாதியில் 45.5 விழுக்காடு கூடியுள்ளது.
முதல் ஆறு மாதங்களில் 118,000க்கும் மேற்பட்ட மீறல் சம்பவங்கள் பதிவாயின.
2024ஆம் ஆண்டின் முற்பாதியில் அந்த எண்ணிக்கை 81,100க்கும் அதிகமாக இருந்தது.
இவ்வாண்டில் பிடிபட்டோரில் ஆக வேகமாக வாகனத்தைச் செலுத்தியவர் ஆயர் ராஜா விரைவுச்சாலையில் மணிக்கு 178 கிலோமீட்டர் வேகத்தில் சென்றார். விரைவுச்சாலைப் பகுதியின் வேக வரம்பான மணிக்கு 80 கிலோமீட்டரைவிட அது ஒரு மடங்கிற்கும் அதிகம்.
கவலைதரும் இந்தப் போக்கைச் சமாளிக்க போக்குவரத்துக் காவல்துறை கூடுதல் சிவப்பு விளக்கு கேமராக்களில் வேக வரம்பு அம்சத்தைச் செயல்படுத்தவிருக்கிறது.
சென்ற ஆண்டு (2024) ஏப்ரல் மாதத்திலிருந்து கட்டங்கட்டமாகத் தீவு முழுதும் பல இடங்களில் அந்த அம்சம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அத்தகைய கேமராக்கள் 42,400க்கும் மேற்பட்ட வேக வரம்பு மீறல்களைக் கண்டுபிடித்துள்ளன.
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதும், இவ்வாண்டின் முற்பாதியில் வேக வரம்பை மீறிய சம்பவங்களின் எண்ணிக்கை குறைவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என்று போக்குவரத்துக் காவல்துறை கூறியது.
2024ஆம் ஆண்டில் பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமான வேக வரம்பு மீறல் சம்பவங்கள் இடம்பெற்றன.
தொடர்புடைய செய்திகள்
வேக வரம்பை மீறுவோருக்கு 2026ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து கூடுதல் குற்றப்புள்ளிகளும் அதிக அபராதமும் விதிக்கப்படும்.
உயிர்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம் என்று போக்குவரத்துக் காவல்துறையின் ஆய்வு, திட்ட, நிறுவன மேம்பாட்டுக் கிளைத் தலைவர் கண்காணிப்பாளர் லியென் வெய்சியோங் கூறினார்.
சென்ற ஆண்டு (2024) வாகனங்களை வேக வரம்பை மீறி ஓட்டிச் சென்றதால் மரணத்தை விளைவித்த விபத்துகளின் எண்ணிக்கை 46. அதற்கு முந்திய ஆண்டு பதிவான 32ஐக் காட்டிலும் இது அதிகம்.
சாலைகளைப் பயன்படுத்துவோரிடையே விழிப்புணர்வை அதிகரிக்க போக்குவரத்துக் காவல்துறை, தொழில்துறையினருடன் சேர்ந்து பணியாற்றி வருகிறது. சாலைப் பாதுகாப்புக் குறித்து விளக்கமளிக்கும் நிகழ்ச்சிகளை இதுவரை 8,000 பேருக்கு அது ஏற்பாடு செய்துள்ளது. அவர்களில் 2,400க்கும் மேற்பட்டோர் கனரக வாகன ஓட்டுநர்கள்.
வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளைப் பொருத்தும்படி நிறுவனங்களைப் போக்குவரத்துக் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. சாலைகளைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் கூடுதல் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அது அறிவுறுத்தியுள்ளது.

