காவல்துறையின் இணையத் தளபத்தியம் அறிமுகம்

காவல்துறையின் இணையத் தளபத்தியம் அறிமுகம்

3 mins read
5a765107-4c51-43e6-8c6f-0a97e3fd2d13
சிங்கப்பூர்க் காவல்துறையின் இணையத் தளபத்தியம் வெள்ளிக்கிழமை (ஜூலை 3) அறிமுகம் கண்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இணையக் குற்றங்களுக்கு எதிரான காவல்துறையின் போராட்டத்தில் முன்னணி வகிக்கவிருக்கும் இணையத் தளபத்தியம் வெள்ளிக்கிழமை (ஜூலை 3) அறிமுகமானது.

இப்புதிய பிரிவின் தொடக்க நிகழ்ச்சி, காவல்துறை ஆணையர் ஹொவ் குவாங் ஹுவீயின் தலைமையில், காவல்துறை கென்டோன்மன்ட் வளாகத்தில் நடைபெற்றது.

ஒருங்கிணைந்த தளபத்தியமாகச் செயல்படுவதால், இணைய மோசடிகளையும் குற்றங்களையும் முடக்குதல், குற்றக் கும்பல்களைச் சீர்குலைத்தல், பொது மக்களிடையே விழிப்புணர்வை அதிகரித்தல் போன்ற செயல்பாடுகளை இப்பிரிவு திறன்படக் கையாளுமெனக் காவல்துறை தெரிவித்தது.

தொடக்க நிகழ்ச்சியில், தளபத்தியத்தின் படைத்தலைவராக மூத்த உதவி ஆணையர் ஜஸ்டின் வோங் ஷிங் ஷுன், 42, பொறுப்பேற்றார்.

தளபத்தியத்தின் படைத்தலைவராக மூத்த உதவி ஆணையர் ஜஸ்டின் வோங் ஷிங் ஷுன் பொறுப்பேற்றார்.
தளபத்தியத்தின் படைத்தலைவராக மூத்த உதவி ஆணையர் ஜஸ்டின் வோங் ஷிங் ஷுன் பொறுப்பேற்றார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

“இணைய அச்சுறுத்தல்களுக்கு எதிரான சிங்கப்பூர்க் காவல்துறையின் முதன்மைப் போர்முனையாக ‘இணையத் தளபத்தியம்’ திகழும்,” என்று அவர் கூறினார்.

“இணையக் குற்றங்களுடன் போராடிவரும் வெவ்வேறு காவல்துறைப் பிரிவுகளை இந்தப் புதிய தளபத்தியத்தின்வழி ஒன்றிணைக்கிறோம்,” என்றும் அவர் கூறினார்.

ஐந்து செயல்முறைகளை அடிப்படையாகக் கொண்டு தளபத்தியத்தின் இணையத் திறன்களைக் காவல்துறை மெருகேற்றவுள்ளதென அவர் குறிப்பிட்டார்.

இணையக் குற்றப் புலனாய்வுத் திறன்களை மேம்படுத்தி அனைத்துலகக் குற்றக்கும்பல்களுக்கு எதிரான செயல்பாடுகளை அதிகரித்தல் முதலாம் செயல்முறை.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

இணையச் சம்பவங்களுக்கு விரைந்து பதிலளிக்கும் வண்ணம், செயல்பாடுகள், விசாரணை, உளவுப் பணிகளை ஒருங்கிணைப்பது இரண்டாம் செயல்முறை.

காவல்துறைச் செயல்பாட்டுத் தளபத்திய மையத்திற்கு நிகரான இணையச் செயல்பாட்டு மையத்தை நிறுவுவது மூன்றாம் செயல்முறை.

24 மணி நேரமும் இயங்கும் அந்த மையம், இணைய அச்சுறுத்தல்கள், சம்பவங்கள் ஆகியவற்றைக் கண்காணிக்கும்.

அவற்றின் தன்மையைப் புரிந்துகொண்டு அவற்றிற்குரிய காவல்துறையின் எதிர் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க அது உதவுமெனத் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறை அதிகாரிகள், குடிமை இணைய வல்லுநர்கள், தேசியச் சேவையாளர்கள் ஆகியோரின் திறன்களை வளர்ப்பதன்வழி காவல்துறையின் இணையத் தரநிலைகளை உயர்த்துவது நான்காம் செயல்முறை.

அனைத்துப் பங்குதாரர்களுடனும் கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதும் சமூக விழிப்புணர்வை அதிகரிக்கும் முயற்சிகளில் ஈடுபடுவதும் ஐந்தாம் செயல்முறை.

தளபத்தியத்தின் முக்கிய முயற்சிகளில் ஒன்றாக, உள்துறைக் குழுவின் அறிவியல், தொழில்நுட்ப அமைப்பின் (HTX) உதவியுடன் ‘தேசிய மோசடிகள் பட்டியல்’ என்ற தளம் அறிமுகமாகவுள்ளது.

அரசாங்கத்திற்கும் அதன் பங்காளித்துவ அமைப்புகளுக்குமிடையே குற்றவாளிகளின் அடையாளங்கள், வங்கிக் கணக்குகள், தொலைபேசி எண்கள், இணையக் கணக்குகள் போன்ற தகவல்களை உடனுக்குடன் தானியக்க முறையில் பரிமாறிக்கொள்வதை இத்தளம் சாத்தியமாக்கும்.

அந்தப் பட்டியல்வழி, வங்கிகள் மோசடிப் பணம் கைமாறுவதை முடக்கவும் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றப் பயன்படுத்தப்படும் கணக்குகளைப் பணம் மாற்றப்படுவதற்கு முன்பே தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் நடவடிக்கை எடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.

தளபத்தியத்தின் துணைப் படைத்தலைவர் கிரகரி காங்க், இனி வரும் மாதங்களில் அரசாங்க ஊழியர் ஆள்மாறாட்ட மோசடிகள்மீதும் மின்னிலக்க நாணயக் குற்றங்கள்மீதும் அதிகக் கவனம் செலுத்தப்படுமெனத் தெரிவித்தார்.

அரசாங்க ஊழியர் ஆள்மாறாட்ட மோசடிகள்மீதும் மின்னிலக்க நாணய குற்றங்கள்மீதும் அதிகக் கவனம் செலுத்தப்படுமெனத் தளபத்தியத்தின் துணை படைத்தலைவர் கிரகரி காங்க் தெரிவித்தார்.
அரசாங்க ஊழியர் ஆள்மாறாட்ட மோசடிகள்மீதும் மின்னிலக்க நாணய குற்றங்கள்மீதும் அதிகக் கவனம் செலுத்தப்படுமெனத் தளபத்தியத்தின் துணை படைத்தலைவர் கிரகரி காங்க் தெரிவித்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

“2025ஆம் ஆண்டு ஒட்டுமொத்த மோசடி சார்ந்த புகார்களும் இழப்புகளும் முந்தைய ஆண்டைவிட குறைந்திருந்தாலும், அரசாங்க ஊழியர் ஆள்மாறாட்ட மோசடிகளின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது,” என்றார் அவர்.

அரசு அதிகாரிகளைப்போல ஆள்மாறாட்டம் செய்து நடத்தப்படும் மோசடி வழக்குகளின் எண்ணிக்கை, 2024ஆம் ஆண்டில் 1,504 ஆகப் பதிவானது. 2025ஆம் ஆண்டு அது 123.6 விழுக்காடு அதிகரித்து 3,363ஆனது.

அத்தகைய மோசடிகளால் ஏற்பட்ட இழப்புத் தொகை, 2024ஆம் ஆண்டில் ஏறக்குறைய $151.3 மில்லியனிலிருந்து, 2025ஆம் ஆண்டு 60.5 விழுக்காடு அதிகரித்து ஏறத்தாழ $242.9 மில்லியனாகப் பதிவானது.

சென்ற ஆண்டு பதிவான மோசடி வழக்குகளில் இரண்டாவது அதிகப்படியான இழப்புகள் அத்தகைய சம்பவங்களால் ஏற்பட்டன.

“மோசடிச் சம்பவங்களில் பெறப்படும் பணத்தை மின்னிலக்க நாணயம்வழி நல்ல பணமாக மாற்றும் போக்கும் மக்களின் மின்னிலக்க நாணயக் கணக்குகளில் பணம் பறிபோகும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன,” என்று திரு கிரகரி கூறினார்.

“ஆகையால், இத்தகைய குற்றங்களை எதிர்கொள்வதிலும் மக்களிடையே விழிப்புணர்வை அதிகரிப்பதிலும் முக்கியக் கவனம் செலுத்தப்படும்,” என்று அவர் உறுதியளித்தார்.

குறிப்புச் சொற்கள்
இணையம்காவல்துறைமோசடிகுற்றம்இணைய மோசடி