தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எஸ்பி‌எச் ஊடக விருது: தமிழ் முரசு செய்தியாளர்களுக்கு மூன்று விருதுகள்

2 mins read
a788f698-3863-4240-b630-bfe841de1f64
(இடமிருந்து) செய்தியாளர்கள் கி. ஜனார்த்தனன், இளவரசி ஸ்டீஃபன், காணொளித் தயாரிப்பாளர் பே.கார்த்திகேயன், தமிழ் முரசு ஆசிரியர் த.ராஜசேகர், செய்தியாளர் ரவி சிங்காரம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

எஸ்பிஎச் மீடியா ஊடக நிறுவனத்தின் செய்திப் பிரிவுகளுக்கான விருது நிகழ்ச்சியில் தமிழ் முரசு செய்தியாளர்கள் மூன்று விருதுகளைத் தட்டிச் சென்றனர்.

எஸ்பிஎச் ஆங்கிலம்/மலாய்/தமிழ் ஊட­கப் பிரிவின் 2024ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சியில் பல செய்தியாளர்கள் சுவையான செய்திகளுக்கான பல பிரிவுகளின்கீழ் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 4) விருது வென்றனர்.

லிட்டில் இந்தியாவில் நீண்டகாலம் நீடித்த கழிவறைப் பற்றாக்குறையை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த செய்திக்காக தமிழ் முரசு செய்தியாளர் ரவி சிங்காரம், 30, சிறந்த மூலக்கதைக்கான விருதை வென்றார்.

லிட்டில் இந்தியாவின் ‘அவசர’ பிரச்சினை என்ற அந்தச் செய்திக்காகக் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் உழைத்தார் சிங்காரம். 

“ஏறக்குறைய 200 பேரிடம் பேசினேன்,” என்ற சிங்காரம், 70 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் லிட்டில் இந்தியாவில் போதுமான கழிவறைகள் இல்லை என்பதைக் குறிப்பிட்டதாகச் சொன்னார்.

சிங்காரத்தின் செய்திக்குப் பின் தேசியச் சுற்றுப்புற வாரியம் நகர்த்தக்கூடிய கூடுதலான கழிவறைகளை லிட்டில் இந்தியாவின் பல இடங்களில் வைத்தது.

தேக்கா லேன், ஹிந்து சாலை, அங்கூலியா பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள திறந்தவெளி ஆகியவற்றில் நகர்த்தக்கூடிய கழிவறைகள் வைக்கப்பட்டன.

தேக்கா நிலையத்தில் உள்ள கழிவறைகளுக்குச் செல்வதற்கான கட்டணமும் 20 காசிலிருந்து 10 காசுக்குக் குறைக்கப்பட்டது.

சிறந்த மின்னிலக்கப் பதிவுக்காக செய்தியாளர் கி. ஜனார்த்தனனும் காணொளித் தயாரிப்பாளர் பே. கார்த்திகேயனும் விருது வென்றனர்.

எழுத்தாளர் தெரேசா தேவசகாயம் அறிமுகப்படுத்திய ‘லிட்டில் ட்ராப்ஸ்’ (Little Drops) என்ற நூலைத் தொடர்ந்து, சீனர்களாகப் பிறந்து தமிழர்களாக வளர்ந்தோரின் கதைகளை ஆவணப்படுத்த ஜனார்த்தனன் விரும்பினார்.

சீனக் குழந்தைகள் எப்படி தமிழ்க் குடும்பத்தில் வளர்ந்தார்கள், அதன் பின்புலம் என்ன ஆகியவற்றை ஜனார்த்தனன் ‘பிறப்பால் சீனர்கள், உணர்வால் தமிழர்கள்’ என்ற செய்தியில் ஆராய்ந்தார்.

சமூக ஊடகத் தளங்கள் மூலமாகவும் சீனர்களாகப் பிறந்து தமிழர்களாக வளர்ந்த நான்கு பெண்களின் கதையைச் சொல்ல முடிவெடுக்கப்பட்டது.

டிக்டாக் தளத்தில் 750,000 பேரையும் இன்ஸ்டாகிராமில் 25,000 பேரையும் அந்தப் பெண்களின் கதை சென்றடைந்தது.

“இரண்டாம் உலகப் போருக்குப் பின் பிறந்தவர்களின் கதையைக் கேட்கும்போது நெகிழ்ச்சியாக இருந்தது. அதை ஆவணப்படுத்த எனக்குக் கிடைத்த வாய்ப்புக்கு நன்றியுடன் உள்ளேன்,” என்றார் திரு ஜனார்த்தனன்.

பல ஊடகத் தளங்களில் சிறப்பாகச் செய்த செய்திக்காக இளவரசி ஸ்டீஃபனுக்கும், காணொளித் தயாரிப்பாளர் பே. கார்த்திகேயனுக்கும் விருது வழங்கப்பட்டது.

‘விடுமுறைக்கு வந்திருந்த குடும்பம்; விடைபெற்று சென்ற சிவராமன்’ என்ற உருக்கமான செய்தியை எழுதுவது இளவரசிக்கு எளிதாக இருக்கவில்லை.

சிங்கப்பூரில் வேலை செய்த சீனிவாசன் சிவராமனைப் பார்க்க பல ஆண்டுகளுக்குப் பிறகு அவரின் குடும்பத்தினர் இங்கு வந்தனர். அச்சமயம் வேலையிடத்தில் நச்சுவாயு தாக்கி சிவராமன் உயிரிழந்தார்.

“செய்தியாளர் என்பதற்காக ஈமச்சடங்கின்போது உடனடியாக அவர்களிடம் சென்று கேள்வி மேல் கேள்வி கேட்கவில்லை,” என்ற இளவரசி, ஈமச்சடங்கு கூடத்திற்கு வெளியே பல மணி நேரம் அமைதியாக நின்றுகொண்டிருந்தபோது சிவராமனின் உறவினர்கள் தாமாக வந்து சோகமான நிகழ்வுகளை தன்னிடம் பகிர்ந்துகொண்டதாகக் சொன்னார்.

இந்த முறை எஸ்பிஎச் மீடியாவின் ஆங்கில வானொலி நிலையங்களுக்கும், ‘டெக் இன் ஏ‌ஷியா’வுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்