எளிய குடும்பங்களைச் சேர்ந்த சிறந்த மாணவர்களுக்கு எஸ்பிஎச் அறக்கட்டளை நிறுவனம், 20ஆம் ஆண்டாக உபகாரச் சம்பள விருதுகளை வழங்கியுள்ளது.
ஆண்டுதோறும் வழங்கப்படும் லிம் கிம் சான் நினைவு உபகாரச் சம்பளத்தைப் பெற்ற வெற்றியாளர்கள் தோ பாயோ நார்த்தில் உள்ள சிங்கப்பூர் பிரெஸ் ஹோல்டிங்ஸ் கட்டடத்தில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 7) நடத்தப்பட்ட நண்பகல் விருது நிகழ்ச்சியில் பாராட்டு பெற்றனர்.
இவ்வாண்டு மொத்தம் 13 பேருக்கு உபகாரச் சம்பளம் வழங்கப்பட்டது.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், நன்யாங் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட உயர்கல்வி நிலையங்களில் அவர்கள் நன்கு தேர்ச்சிபெற்ற மாணவர்கள். அந்த உபகாரச் சம்பளத்தைப் பெறும் மாணவர்கள் ஊடகத் துறையைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்பது கட்டாயம் அல்ல.
மொழித்துறை, மொழியியல், மானுடவியல் உள்ளிட்ட துறைகளில் அம்மாணவர்கள் பயில்கின்றனர். 2006ல் தொடங்கப்பட்ட அந்த உபகாரச் சம்பளம், இதுவரை 190க்கும் அதிகமான மாணவர்களின் கல்விக் கனவுகளை நனவாக்கியுள்ளது.
உபகாரச் சம்பளம் பெற்றதில் மகிழ்ச்சியையும் பெருமையையும் உணர்வதாக நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் இறுதியாண்டு மாணவர் ரவுலிந்தர் சிங், 26, தமிழ் முரசிடம் தெரிவித்தார்.
உயர்நிலைப் பள்ளிப் பருவத்தில் படிப்பில் கவனம் செலுத்தாமல் கணினி விளையாட்டில் பொழுதைக் கழித்த திரு ரவுலிந்தரின் வாழ்க்கையில் அவரது தந்தையின் எதிர்பாராத மரணம் திருப்புமுனையாக அமைந்தது.
‘‘அக்டோபர் இறுதியில் ‘ஓ’ நிலைத் தேர்வுகள் தொடங்கின. என் தந்தையோ, செப்டம்பரில் மாரடைப்பால் இறந்தார். இது, அவருக்கு ஏற்பட்ட இரண்டாவது மாரடைப்பு,’’ என்று திரு ரவுலிந்தர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
மனதார வேதனையை உணர்வதற்கு நேரம்கூட இன்றி தேர்வு எழுதும் முக்கியப் பொறுப்பை மேற்கொண்டார் அவர். பலதுறையில் தகவல் தொடர்புப் பட்டயத்தை மேற்கொண்டது, அவரது கல்வியின் ஏறுமுகப் பாதைக்கு வித்திட்டது. நிகழ்ச்சிப் படைப்பாளர் ஆகவேண்டும் என்பது அவரது வருங்கால இலக்கு.
காலஞ்சென்ற முன்னாள் அமைச்சர் லிம் கிம் சானைப் போல உபகாரச் சம்பளம் பெற்றவர்கள் பிறருக்கு, குறிப்பாக உதவி தேவைப்படுவோர்க்குச் சேவையாற்றும்படி ‘எஸ்பிஎச்’ அறக்கட்டளையின் தலைவர் பேட்ரிக் டேனியல் கேட்டுக்கொண்டார்.
“நம் கல்விமான்களின் குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும், குறிப்பாக பெற்றோர்களுக்கு என் வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவிக்கிறேன். உங்கள் தியாகங்கள், ஊக்கம், பிள்ளைகள் மீதான உங்கள் நம்பிக்கை அவர்களை இந்த அளவுக்கு உயர்த்தியுள்ளது,” என்று அவர் கூறினார்.