செய்தித் துறையில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம்

செய்தித் துறையில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம்

2 mins read
71cc45de-8f8b-414a-aaf6-0f694d1434a3
எஸ்பிஎச் மீடியா தலைமை நிர்வாக அதிகாரி சான் யெங் கிட்டிடமிருந்து விருது பெறும் சாஹித்தி மகேஸ்வரம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

இவ்வாண்டிற்கான எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட் ஊடக நிறுவனத்தின் கல்வி விருது விழாவில், சிங்கப்பூர் இந்திய மாணவர்கள் மூவருக்கு ‘அஸ்பையர்’ விருது (aSPHire Award) வழங்கப்பட்டது.

தெம்பனிஸ் மெரிடியன் தொடக்கக் கல்லூரியில் படிக்கும் பெண்டேலா வெங்கட சாய் தன்மே, சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரியில் படிக்கும் சாஹித்தி மகேஸ்வரம், நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் படிக்கும் சூர்யா அபிலாஷ் ரோஹித் ஆகியோரே அம்மூவர்.

அஸ்பையர் விருதுகள், எஸ்பிஎச் மீடியா ஊழியர்களின் பிள்ளைகளின் கல்வி சாதனைகளை அங்கீகரித்து அவர்களின் உயர் கல்வியில் ஆதரவளிக்கவும் உதவுகின்றது.

இவ்விருதுகள் தொடக்கக்கல்லூரி, பலதுறைத் தொழிற்கல்லூரி, மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றது.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைமஸ் நாளிதழில் பணியாற்றும் திரு மகேஸ்வரம் அனில் குமாரின் மகளான சாஹித்தி, “நான் இந்தக் கல்வி விருதுக்கு விண்ணப்பித்தது இதுவே முதல் முறை. இவ்விருது எனக்குக் கிடைத்ததும் என் பெற்றோர் மிகவும் பெருமைப்பட்டனர்,” என்றார். 

இன்னோர் ஊழியர் திரு சூரியகாந்தி விஜயகுமார் அபிலாஷின் மகன் சூர்யா அபிலாஷ் ரோஹித், “எனக்கு உபகாரச் சம்பளம் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. என் பெற்றோரின் சுமையை இது குறைக்கும். நான் கடந்த ஆண்டு இவ்விருதுக்கு விண்ணப்பித்திருந்தேன். ஆனால், அப்போது கிடைக்கவில்லை,” என்று சொன்னார்.

அஸ்பையர் விருதுகளுடன், ஐவருக்கு எஸ்பிஎச் மீடியா பத்திரிகை உபகாரச் சம்பளமும் மூவருக்கு எஸ்பிஎச் மீடியா தெமாசெக் அறநிறுவன உபகாரச் சம்பளமும் வழங்கப்பட்டன.

உபகாரச் சம்பள விருதுகள், செய்திகளை வழங்கும் அனுபவத்தைப் பெற விரும்பும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வேலை வாய்ப்புகளையும் பயிற்சிகளையும் வழங்குகின்றன.

எஸ்பிஎச் நியூஸ் சென்டரில் புதன்கிழமை (ஜூலை 24) நடந்த நிகழ்வில், எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட் தலைவர் கோ பூன் வானும் எஸ்பிஎச் மீடியா தலைமை நிர்வாக அதிகாரி சான் யெங் கிட்டும் மாணவர்களுக்குக் கல்வி விருதுகளை வழங்கினர்.

“எஸ்பிஎச் மீடியா தொடர்ந்து திறமையை வளர்ப்பதற்கும் ஊடகத் துறையில் புதுமைகளை ஊக்குவிக்கவும் ஆழ்ந்த அர்ப்பணிப்பு கொண்டுள்ளது. இவ்வாண்டு திறமையான பல மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. திறனாளர்களை அடையாளம் கண்டு, முதலீடு செய்வது மிகவும் முக்கியம்,” என்று திரு சான் கூறினார்.

குறிப்புச் சொற்கள்