தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விமானப் பயணம் முழுக்க கழிவறைக்குள் மாட்டிக்கொண்ட பயணி!

1 mins read
1ab6d30e-5deb-47e9-b887-734ee5cc6518
கழிவறைக்குள் மாட்டிக்கொண்ட பயணியை ‘பீதியடைய வேண்டாம்’ என்று விமானப் பணியாளர்கள் துண்டுச்சீட்டு மூலம் கேட்டுக்கொண்டனர். - படங்கள்: இந்திய ஊடகம்

மும்பை: திறக்க முடியாதபடி கதவு பூட்டிக்கொண்டதால் விமானப் பயணி ஒருவர் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழிவறைக்குள்ளேயே சிக்கிக்கொள்ள நேர்ந்தது.

இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 16) அதிகாலை மும்பையிலிருந்து பெங்களூரு சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் நிகழ்ந்தது.

பின்னிரவு 2.13 மணிக்கு அவ்விமானம் மும்பையிலிருந்து கிளம்பியது. இருக்கைவார் சமிக்ஞை விளக்கு அணைந்ததும் அந்த ஆண் பயணி கழிவறைக்குச் சென்றார். ஆனால், கழிவறைக் கதவைத் திறக்க முடியாமல் அவர் உள்ளேயே மாட்டிக்கொண்டார்.

பின்னர் 3.10 மணியளவில் விமானம் தரையிறங்கி, தொழில்நுட்பர்கள் மூலம் கதவு திறக்கப்பட்ட பிறகே அவர் கழிவறையைவிட்டு வெளியே வர முடிந்தது.

அதன்பின் உடனடியாக அவருக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

இச்சம்பவத்திற்காக வருத்தம் தெரிவித்த ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், அப்பயணிக்குப் பயணக்கட்டணத்தைத் திருப்பித் தருவதாகவும் தெரிவித்தது.

மேலும், பயண நேரம் முழுவதும் அப்பயணிக்கு உதவி வழங்கப்பட்டதாகவும் அது குறிப்பிட்டது.

கழிவறைக் கதவைத் திறக்க முடியாமல் போனதையடுத்து, ‘பீதியடைய வேண்டாம்’ எனக் குறிப்பிட்டு, விமானப் பணியாளர்கள் ஒரு துண்டுச்சீட்டைக் கதவிடுக்கு வழியாகச் செருகினர்.

அதில், “ஐயா, கதவைத் திறக்க எங்களால் முடிந்த அளவு முயன்றோம். ஆனாலும் முடியவில்லை. பீதியடைய வேண்டாம். இன்னும் சில நிமிடங்களில் தரையிறங்கிவிடுவோம். கழிப்பறைக்கலனை மூடி, அதன்மேல் பாதுகாப்பாக அமர்ந்துகொள்ளுங்கள். விமானக் கதவு திறக்கப்பட்டதும் பொறியாளர் வருவார். பதற்றப்பட வேண்டாம்,” என்று அதில் குறிப்பிட்டிருந்தது.

குறிப்புச் சொற்கள்