சிங்கப்பூர் பூமலையில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பராமரிக்கப்பட்டு வந்த அரிய வகை இஞ்சித் தாவரம் ஒன்று, வரலாற்றிலேயே முதன்முறையாகப் பூத்துள்ளது.
‘காஸ்டஸ் ஃபெனெஸ்ட்ராலிஸ்’ (Costus fenestralis) எனப்படும் இந்தச் சுருள் இஞ்சி வகைத் தாவரம், மத்திய ஆப்பிரிக்காவின் காபோன் நாட்டு மலைப்பகுதியை பூர்வீகமாகக் கொண்டது.
குடை போன்ற இலை அமைப்பைக் கொண்ட இத்தாவரத்தில், தற்போது வெளிர் இளஞ்சிவப்பு நிற இதழ்களும் நடுவே தேனீக்களைக் கவரும் பிரகாசமான மஞ்சள் நிறத் திட்டும் கொண்ட அழகிய குழாய் வடிவ மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.
2016ல் தான் இந்தத் தாவரம் அதிகாரபூர்வமாக வகைப்படுத்தப்பட்டது. அதுவரை பதப்படுத்தப்பட்ட உலர்ந்த மாதிரியாக மட்டுமே தாவரவியலாளர்களால் ஆராயப்பட்டதால், இதன் மலரின் உண்மையான நிறமும் வடிவமும் முழுமையாக அறியப்படாமல் இருந்தது.
தற்போது சிங்கப்பூரில் இது பூத்ததன் மூலம், தாவரத்தின் முழுமையான வடிவம் உலகிற்குத் தெரியவந்துள்ளது.
“இத்தகைய அரிய தருணங்கள், உயிருள்ள தாவரங்களைப் பல ஆண்டுகளாக பேணிப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன. தாவரக் காப்பாளர்களின் பொறுமைக்கும் அர்ப்பணிப்புக்கும் கிடைத்த வெற்றி இது,” என பூமலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரின் பசுமைப் பாரம்பரியத்திற்குப் பெருமை சேர்க்கும் இந்த அரிய மலரைக் காண இயற்கை ஆர்வலர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

