‘ஸ்பைஸ்’ நிறுவனத்தின் இரண்டு உணவகங்களுக்கு உணவு பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத குற்றத்திற்காக தலா $3,600 அபராதம் விதித்ததாக சிங்கப்பூர் உணவு அமைப்பு புதன்கிழமை தெரிவித்தது.
கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் பிடோக் சாலையில் அமைத்துள்ள அந்த உணவகங்களில் உணவு உட்கொண்ட 15 பேருக்கு வயிற்றுக்கோளாறு ஏற்பட்டதாக அமைப்பிற்குப் புகார் வந்தது.
அதனைத் தொடர்ந்து அமைப்பும் சுகாதார அமைச்சும் நடத்திய கூட்டு விசாரணையில், பிடோக் சாலையில் 336/338 எண்ணில் இயங்கும் ஸ்பைஸ்’ நிறுவனத்தின் உணவகத்தில் பல உணவு பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பதைக் கண்டறிந்தனர்.
சமைத்த உணவையும் சமைக்காத உணவுப் பொருள்களையும் ஒழுங்காகப் பிரித்து வைக்காதது, சுத்தமான பலகையில் உணவுப் பொருள்களை வெட்டாதது போன்ற குறைபாடுகள் அங்கு கண்டறியப்பட்டன.
284 பிடோக் சாலையில் அமைந்துள்ள ‘ஸ்பைஸ்’ நிறுவனத்தின் மற்றொரு உணவகத்திலும் உணவுப் பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டன. சமையலறைக்கு அருகே இருக்கும் கழிப்பறையில் கைகளைக் கழுவ சவர்க்காரம் இல்லாதது, உணவுகளைப் பதப்படுத்த பயன்படுத்தும் இடத்தை வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தியது ஆகிய குறைபாடுகள் அங்கு கண்டறியப்பட்டன.
உணவு பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றும்படி அந்த இரண்டு உணவகங்களுக்கு அமைப்பு உத்தரவிட்டுள்ளது. மேலும், அந்த உணவகங்களின் உணவுச் சுகாதாரத் தரநிலை மதிப்பீடு குறைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.


