அமெரிக்க வரிவிதிப்புகளால் உலகப் பொருளியல் வீழ்ச்சியடையாவிட்டாலும், சிங்கப்பூர் உட்பட பல நாடுகள் இப்போது மோசமான நிலையில் உள்ளன என்றும், இந்தப் பின்னடைவு நீண்ட காலத்திற்கு அவ்வாறே இருக்கும் என்றும் கூறியுள்ளார் மூத்த அமைச்சர் லீ சியன் லூங்.
சனிக்கிழமை (நவம்பர் 6) அன்று செங் சான் சமூக மன்றம் அதிகாரபூர்வமாக மீண்டும் திறக்கப்பட்டது. இந்தத் தொடக்க விழாவில் பங்கேற்ற திரு லீ, அமெரிக்கா விதித்து வரும் கடும் வரிகளால் நிகழ்ந்துவரும் உலகளாவிய பொருளியல் சவால்கள், அவை சிங்கப்பூரின் வளர்ச்சியில் ஏற்படுத்தும் தாக்கம், அனைத்துலக உறவுகள் ஆகியவை குறித்துப் பேசினார்.
அமெரிக்கா அடுத்தடுத்து அரங்கேற்றி வரும் வரிவிதிப்புகள் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளின் நிலையை மோசமாக்கியுள்ளதாகச் சுட்டிய திரு லீ, இதன் அர்த்தம் சிங்கப்பூருக்கு குறைவான வளர்ச்சி கிட்டும் என்பதும், இத்தகைய முடிவுகள் குழப்பமான உலகத்துக்கு வித்திடும். 2025ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் பொருளியல் எதிர்பார்த்ததை விட சிறப்பாகச் செயல்படும் என்று கணிக்கப்பட்டிருந்தாலும் மேற்கூறிய இந்தச் சூழல் நிலவுவதாகக் குறிப்பிட்டார் மூத்த அமைச்சர்.
வர்த்தகப் பங்காளிகளுக்கு ஏப்ரல் மாதத்தில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்த 10 விழுக்காடு வரிவிதிப்பில் அடிப்படை வரி, இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களின் மீதான வரிகளும் இடம்பிடித்திருந்தன. இத்தகைய வரிவிதிப்பு முறையால் பாதிக்கப்பட்ட நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்றாகும்.
அனைத்துலக வர்த்தகம் மற்றும் முதலீடு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் பிற நாடுகளுடனான உறவுகள் குறித்து அமெரிக்கா தற்போது மிகவும் மாறுபட்ட அணுகுமுறையைக் கொண்டுள்ளதாகக் கூறினார் திரு லீ.
தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘‘இரு நாடுகளுக்கும் வெற்றி தரும் ஒத்துழைப்பு, மற்றும் பெரிய, சிறிய நாடுகளுக்குப் பொருந்தும் விதிமுறைகளில் அமெரிக்கா தற்போது நம்பிக்கை கொள்ளவில்லை,” என்றார்.
அதற்கு மாற்றாக, அமெரிக்கா தற்போது இருதரப்பு உறவுகள் அடிப்படையில் நாடுகளுடன் பழகுவதற்கும், அந்நாட்டிற்கு அதிகபட்ச நன்மைகளை நல்குவதற்கு ஏதுவாக அதன் வலிமையைப் பயன்படுத்துவதற்கும் நாடுகிறது என்று விவரித்தார் திரு லீ.
‘‘வரிகளை விதித்தால், அமெரிக்கா தனது வர்த்தக பற்றாக்குறையைக் குறைத்து, பிற நாடுகளிடமிருந்து கூடுதலாகப் பலன்களைப் பெற முடியும் என நம்புகிறது,” என்று மேலும் கூறினார் மூத்த அமைச்சர்.
தொடர்புடைய செய்திகள்
இதனால் நிச்சயமற்ற மற்றும் மிகவும் சிக்கலான உலகில் அனைவரும் இழப்பைச் சந்திக்க நேரிடும் குறிப்பாகச் சிறிய நாடுகள் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலைக்குச் சென்றுவிடும் என்றும் அக்கறை தெரிவித்தார் திரு லீ.
அண்மையில் நடைபெற்ற மலேசியா சிங்கப்பூர் ஓய்வுத்தள சந்திப்பு நிகழ்ச்சியைச் சுட்டிய திரு லீ, அண்டை நாடுகளுடனான குடியரசின் உறவுகள் பொதுவாக நிலையானதாகவும் நன்முறையில் இணக்கமானதாக திகழ்வதாகவும் கூறினார்.
மேலும், சிங்கப்பூர் மலேசியத் தலைவர்களின் சந்திப்பு நிறைவாக இருந்ததாகவும், ‘‘எனினும் பிரச்சினைகள் எப்போதும் உள்ளன. அத்தகைய நெடுங்காலப் பிரச்சினைகள் எளிதில் தீர்க்கப்படாது,’’ என்றும் சொன்னார்.
மேற்கூறிய அந்தச் சந்திப்பின்போது, நீர், வான்வெளி மற்றும் கடல் எல்லைகள்குறித்த அம்சங்கள் முக்கிய இடத்தை வகித்தன என்பது குறிப்பிடத்தக்கது,
அனைத்துலக உறவுகள்குறித்து மேலும் கருத்துரைத்த திரு லீ, “ஆசியான் நாடுகளுக்குள்ளேயும், நெருங்கிய அண்டை நாடுகளிடையேயும், நம் உறவுகள் தொடர்ந்து சீரான பாதையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
‘‘ஏனெனில் பாதையை விட்டு விலகிச் சென்றால், ஏற்கெனவே நெருக்கடி மிகுந்த உலகில் அது நமக்கு நற்செய்தி அன்று,’’ என்றார்.

