தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜெர்மன் கிறிஸ்துமஸ் சந்தைத் தாக்குதலில் சிங்கப்பூரர்களுக்கு பாதிப்பு இல்லை

2 mins read
6bd76e84-5def-4a21-a6e7-e40975a3c2f2
தாக்குதலில் உயிரிழந்தோருக்கு சம்பவம் நிகழ்ந்த இடத்தில் மலர்களை வைத்தும் மெழுகுவத்திகளை ஏற்றியும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். - படம்: ராய்ட்டர்ஸ்

ஜெர்மனியின் கிறிஸ்துமஸ் சந்தையில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 20) நடத்தப்பட்ட தாக்குதலுக்கு சிங்கப்பூர் கண்டனம் தெரிவித்து உள்ளது.

தலைநகர் பெர்லினுக்கு தென்மேற்கில் 130 கி.மீ. தூரத்தில் உள்ள மாக்டெபர்க் நகரில் நடத்தப்பட்ட அந்தத் தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்; 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சாக்சோனி-அன்ஹால்ட் மாநிலத் தலைநகரம் அது.

உயிரிழந்தவர்களில் ஒன்பது வயதுச் சிறுமியும் அடங்குவார். மேலும், காயமடைந்தவர்களில் 41 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.

கிறிஸ்துமஸ் சந்தையில் கூடியிருந்த மக்கள் கூட்டத்திற்குள் பிஎம்டபிள்யூ கார் ஒன்று நுழைந்து, 400 மீட்டர் தூரத்திற்கு மக்கள் மீது மோதியவாறு சென்றது. அந்தத் தாக்குதல் ஏறத்தாழ மூன்று நிமிடங்கள் நீடித்தது.

அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட அந்தக் கொடூரத் தாக்குதல்களை நியாயப்படுத்த முடியாது என ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 22) சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சு கூறியது.

“அந்தச் சம்பவத்தில் இறந்தவர்களையும் அவர்களின் குடும்பத்தையும் சிங்கப்பூர் நினைவில் வைத்திருக்கும். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறோம்.

“இந்தத் துயரமான வேளையில் ஜெர்மானிய மக்களுக்கு நாங்கள் துணைநிற்போம்,” என்று அமைச்சு தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.

இணையம் வாயிலாக பதிவு செய்துள்ள ஜெர்மன்வாழ் சிங்கப்பூரர்களின் விவரங்களை, பெர்லினில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் திரட்டியதோடு உள்ளூர் அதிகாரிகளுடன் அது தொடர்பில் உள்ளதாகவும் அமைச்சு தெரிவித்து உள்ளது.

தாக்குதல்களில் சிங்கப்பூரர்கள் எவரேனும் எவரும் பாதிக்கப்பட்டுள்ளனரா என்ற தகவலை உறுதிசெய்ய ஜெர்மானிய அதிகாரிகளை சிங்கப்பூர் தூதரகம் தொடர்புகொண்டது.

இதுவரை கிடைத்த தகவல்களின்படி சிங்கப்பூரர்கள் நேரடியாக பாதிக்கப்படவில்லை என்றும் யாரும் காயமடையவில்லை என்றும் அமைச்சு தெரிவித்து உள்ளது.

உள்ளூர்ச் செய்திகளை தொடர்ந்து கண்காணிக்குமாறும் உள்ளூர் அதிகாரிகளின் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப நடந்துகொள்ளுமாறும் ஜெர்மனியில் உள்ள சிங்கப்பூரர்களை வெளியுறவு அமைச்சு கேட்டுக்கொண்டு உள்ளது.

அவசர தூதரக உதவிகள் தேவைப்படுவோர் பெர்லினில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தையோ +65-6379-8800/8855 என்னும் வெளியுறவு அமைச்சின் 24 மணிநேர தொலைபேசி எண்ணையோ தொடர்புகொள்ளலாம் என்றும் அது தெரிவித்து உள்ளது.

குறிப்புச் சொற்கள்