அமெரிக்காவில் 15 உயிரைப் பறித்த தாக்குதலுக்கு சிங்கப்பூர் கண்டனம்

அமெரிக்காவில் 15 உயிரைப் பறித்த தாக்குதலுக்கு சிங்கப்பூர் கண்டனம்

1 mins read
3308aaf1-6bbc-4959-b56c-53d337263ace
எல்லா நாடுகளிலும் பயங்கரவாதம் ஓர் அச்சுறுத்தலாக நீடிப்பதை தாக்குதல் சம்பவம் கடுமையாக உணர்த்தி உள்ளதாக சிங்கப்பூர் தெரிவித்து உள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

அமெரிக்காவின் நியூ ஆர்லின்ஸ் நகரில் ஜனவரி முதல் தேதி நிகழ்ந்த தாக்குதலுக்கு சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு கண்டனம் தெரிவித்து உள்ளது.

லூசியானா மாநிலத்தில் உள்ள அந்த நகரில் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்காக ஒன்று திரண்டு இருந்த கூட்டத்திற்குள் வாகனத்தைச் செலுத்தி தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.

அதில் 15 பேர் உயிரிழந்ததோடு 35 பேர்படுகாயமடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட 42 வயது ஆடவரை காவல்துறையினர் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொன்றனர்.

அந்தச் சம்பவத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்து சனிக்கிழமை (ஜனவரி 4) அறிக்கை ஒன்றை வெளியுறவு அமைச்சு வெளியிட்டது.

சிங்கப்பூரர்கள் உலகின் எந்த நாட்டுக்குச் சென்றாலும் விழிப்புடன் இருக்குமாறும் உள்ளூர் நிலவரங்களை செய்திகள் மூலம் அறிந்து அதற்கேற்ப செயல்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் அமைச்சு அறிவுறுத்தி உள்ளது.

எல்லா நாடுகளிலும் பயங்கரவாதம் ஓர் அச்சுறுத்தலாக நீடிப்பதை இந்தச் சம்பவம் கடுமையாக உணர்த்தி உள்ளது என்று குறிப்பிட்ட அமைச்சின் அறிக்கை, தாக்குதலில் மாண்டவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து உள்ளது.

அமெரிக்கா செல்லும் சிங்கப்பூரர்கள் வெளியுவு அமைச்சின் இணையத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும் அவசர நேரத்தில் அவர்களைத் தொடர்புகொள்ள அது கைகொடுக்கும் என்றும் அமைச்சு கூறி உள்ளது. மேலும், நியூ ஆர்லின்ஸ் தாக்குதலில் சிங்கப்பூரர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என்றும் அது தெரிவித்து உள்ளது.

குறிப்புச் சொற்கள்