மூலாதாரப் பணவீக்கம் ஈராண்டு காணாத சரிவு

2 mins read
f3906b3f-73b0-40ea-9783-be2b3c2489fe
2022 மார்ச்சுக்குப் பிறகு மூலாதாரப் பணவீக்க விகிதம் ஆகக் குறைவாகப் பதிவாகியுள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பயனீட்டாளர் விலை அதிகரிப்பு, நிபுணர்கள் ஜூன் மாதம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் மேலும் தணிந்துள்ளது.

ஒட்டுமொத்தப் பணவீக்கம் மூவாண்டுகள் இல்லாத அளவை எட்டியது. மூலாதாரப் பயனீட்டாளர் பணவீக்கம் ஈராண்டுகளுக்கு மேல் காணாத அளவு சரிந்தது.

இங்குள்ள குடும்பங்களின் செலவினங்களை நன்கு பிரதிபலிக்க, தனியார் போக்குவரத்து, தங்குமிடச் செலவுகள் ஆகியவற்றைத் தவிர்த்த மூலாதாரப் பணவீக்கம், ஆண்டு அடிப்படையில் 2.9 விழுக்காட்டுக்குக் குறைந்தது.

கடந்த மூன்று மாதங்களில் அது 3.1 விழுக்காடாக இருந்தது.

சென்ற 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு பதிவாகியுள்ள ஆகக் குறைவான பணவீக்க விகிதம் அது.

புளூம்பெர்க் கருத்துக்கணிப்பு ஒன்றில் நிபுணர்கள் முன்னுரைத்த 3 விழுக்காட்டைக் காட்டிலும் அது குறைவு.

ஒட்டுமொத்தப் பணவீக்கம், குறைவான தனியார் போக்குவரத்துச் செலவுகள் காரணமாக கடந்த ஜூன் மாதம் 2.4 விழுக்காட்டுக்குக் குறைந்தது.

சென்ற மே மாதத்தில் அது 3.1 விழுக்காடாக இருந்தது.

மாதாந்தர அடிப்படையில், ஜூன் மாதத்தில் மூலாதாரப் பணவீக்கத்தில் மாற்றமில்லை.

வர்த்தக, தொழில் அமைச்சும் சிங்கப்பூர் நாணய ஆணையமும் 2024ல் மூலாதாரப் பணவீக்கம் 2.5 விழுக்காட்டுக்கும் 3.5 விழுக்காட்டுக்கும் இடைப்பட்டிருக்கும் என்று மதிப்பிட்டுள்ளன.

இருப்பினும், ஒட்டுமொத்தப் பணவீக்கத்துக்கான முன்னுரைப்பு அளவு மறுஆய்வு செய்யப்படுவதாக அவை தெரிவித்தன. ஜூலை 26ஆம் தேதி வெளியிடப்படவிருக்கும் ஆணையத்தின் அடுத்த நிதிக் கொள்கை அறிக்கையில் அது குறித்து தெரிவிக்கப்படும் என்று அவை கூறின.

இந்நிலையில், தனியார் போக்குவரத்துச் செலவுகள் ஆண்டு அடிப்படையில் ஆகக் குறைவாக 0.7 விழுக்காடு குறைந்ததாக ஜூன் மாதத் தரவுகள் காட்டின.

சென்ற மே மாதம் அது 2.8 விழுக்காடு அதிகரித்திருந்தது.

சில்லறை, மற்ற பொருள்களுக்கான பணவீக்க விகிதம், ஜூனில் 0.5 விழுக்காடாகப் பதிவானது.

சேவைகள் பணவீக்கம் 3.4 விழுக்காடு கூடியது. உணவுக்கான பணவீக்கம் 2.8 விழுக்காட்டில் இருந்தது.

எரிவாயு, மின்சாரப் பணவீக்கம் மாற்றமின்றி 6.9 விழுக்காடாகப் பதிவானது.

தங்குமிடங்களுக்கான பணவீக்கம், 3.3 விழுக்காடாகப் பதிவானது.

குறிப்புச் சொற்கள்